Tuesday, March 27, 2012

முடியாதெனினும்...


ரைந்திடும் மழை மட்டும் மனக்
கவலையை கரைக்க முடியுமானால்?
வீசிடும் தென்றல் மட்டும் சற்றே
வெஞ்சினம் அகற்ற முடியுமானால்?
விழுங்கிடும் இனிப்பு மட்டும் மன
எரிச்சலைக் குறைக்க முடியுமானால்?
பளிச்சிடும் மின்னல் மட்டும் வீண்
பயங்களைக் கொய்ய முடியுமானால்?
முழங்கிடும் இடி மட்டும் பல
முனகல்களை நிறுத்த முடியுமானால்?
படர்ந்திருக்கும் பச்சை மட்டும் சில
பார்வைகளை மாற்ற முடியுமானால்?
வண்ணம் தீட்டும் வானவில் மட்டும்
எண்ணம் தீட்ட முடியுமானால்?
முடியாதெனினும் ஒரு கண சுகம்
நினைத்துப் பார்ப்பதில்...
<<<>>>

Wednesday, March 21, 2012

முழுமையாக ஒரு வாழ்த்து...



அன்புடன் ஒரு நிமிடம்... -  2

முழுமையாக ஒரு வாழ்த்து... 

''என்ன ஞாபகம் வெச்சாலும் மறந்துடுது!'' அலுத்துக் கொண்டான் பரசு, ''Complimentary,  Complementary இந்த ரெண்டு வார்த்தையும்  குழப்புது என்னை... '' 
''ரொம்ப சுலபம்,'' என்றார் வாசு. அப்பா. ''Complimentary என்பது வாழ்த்துவது. நாம முதல்ல தெரிஞ்சுக்கிட்ட வார்த்தை இதுவாத்தான் இருக்கும். வாழ்த்தறதுன்னு அர்த்தம்.''
 ''அது தெரிஞ்ச மறக்காத விஷயம், சரி, அடுத்தது?''
''Complementary அப்படீங்கிறது முழுமையாக்குவது என்கிற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete  அதனால Comple என்று  i -க்குப் பதிலா e  வருது. அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே! தவிர அர்த்தத்தை வைத்துப் பார்க்கையில் அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றை ஒன்று முழுமையாக்குவது.''
கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டிற்று பரசுவுக்கு. 
''அப்புறம் அது முக்கியமான வார்த்தையும் கூட. வாழ்க்கையில நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்க வேண்டும் அப்பத்தானே அழகு? பயன்?''
''நிச்சயமா.''
''கணவனும் மனைவியும் எடுத்துக் கொண்டால் இவனிடம் சில நல்ல குணங்கள் இருக்கும். அவளிடம் சில இருக்கும். ரெண்டும் ஒரேமாதிரியாக இல்லாமல் இவனிடமில்லாத சிலது அவளிடமும், மாற்றியும் அமைந்தால் அது அந்த அளவில் Complementary தானே?''
''கண்டிப்பா!''
''அந்தக் காலத்தில், அதாவது  கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்தத்தில் Complementary ஆக அமைந்திருந்ததால், குழந்தைகளுக்கு அதுவே அவர்களின் வாழ்க்கையின் மாபெரும் இயங்கு முன்னேற்ற  தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கி வைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary -யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோட படிக்கிற மாதிரி. பாட்டி பழமொழிகளில் தொடங்கி, பக்திப் பாடல் படிக்க வெச்சு, ப த நி ஸ வரை சொல்லிக் கொடுப்பா. சித்தப்பா அல்லது மாமா  பேட்மிண்டன் கத்துக் கொடுப்பார். எல்லாம் ஒரே இடத்தில நடந்திரும்.  இப்ப நாம அவனை அழைச்சிட்டு  நீச்சல் கிளாஸ், ம்யூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு   பேட்டை விட்டு பேட்டை அலையறோம் அந்த Complementary  -யின் ஒவ்வொரு அம்சத்துக்கும்!''
''அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?''
''அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?''
கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள் சொல்லிக் கொண்டார்.''அட, யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனி நல்லது தான் நடக்கும்.''

<<<<>>>>



Monday, March 19, 2012

எப்போதும் காதில்...


பாட் ஸ்பீக்கரை காதில் செருகியபடியே சமையலைக் கவனித்துக் கொண்டிருந்த மனைவி பத்மாவைப் பார்க்கப் பார்க்க  பாஸ்கருக்கு எரிச்சலாக வந்தது.

அவளைக் காதலித்து மணந்தவன் அவன். பெரிய சங்கீத வித்வானான தந்தையைப் பகைத்துக் கொண்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டவனுக்கு அவளிடம் பிடிக்காத ஒரே விஷயம் இது தான்.
லேசாய்ச் சொன்னால் கேட்பதாயில்லை.

அன்றைக்கு சண்டை பெரிதாகிவிட்டது. அப்படி என்ன எப்பவும் பாட்டு வேண்டிக்கிடக்கு?’’

அவள் சொன்னாள் : உங்கப்பாவோட சண்டை போட்டுட்டு அவர் மேலே உள்ள கோபத்தில் அவர் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளைக் கண்டாலும் வெறுக்கறீங்க. ஆனா நானோ ஆர்வத்தோடு அவர்கிட்டே சங்கீதம் படிக்க வந்து அங்கே உங்களை சந்தித்து காதலித்து கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். அவரோட உயர்ந்த இசையைக் கேட்காம என்னால இருக்க முடியலே. அதான் உங்களுக்குக் கேட்காத விதத்தில் மாமாவோட பாட்டைக் கேட்டு ரசிக்கிறேன். தப்பாங்க?’’

பாஸ்கருக்குக் கோபம் வரவில்லை. 
<<<<>>>>
(குமுதம் 27-08-2008 இதழில் வெளியானது)



Wednesday, March 14, 2012

முதல் முதலாக...



மூட மட்டுமல்ல இமைகள் 
திறக்கவும்.

வெகுமதிக் கோப்பை 
தளும்புகின்றது 
சிந்தும் வியர்வை.

முதலிடத்துக்கான 
முதலீடுகளில் 
முதலிலிருப்பது 
முயற்சியே.

ரவு விடியலில் 
முடிவது போல 
உழைப்பு உயர்வில்.

ந்துகிற முயற்சிக்கேற்ப 
முந்துகிறாய் பாதையில்.


வெற்றிக்கில்லை தனியே 
ஒரு ராஜ பாட்டை
எனவே பொருட்படுத்தாதே   
நீ படும் பாட்டை.

வலைப் படாதே என்று 
சொல்ல மாட்டேன்
கவலைப் படு
உன் உழைப்பின் போதாமை பற்றி
உள்ளுக்குள் முயலாமை பற்றி
முயல்- ஆமை பற்றி.

லகம் உன் காலடியில் 
அதில் சேர்ந்திருக்கும்
புழுதியின் கனத்துக்கேற்பவே..
 

ன்று உழைத்துக் 
களைப்படைகிறாய்
நாளை பிழைத்துக் 
களிப்படைகிறாய்
இல்லையேல் வாழ்வில் 
களையப் படுகிறாய்.  


நிறைய வேர்வை சிந்திவிட்டு 
நிலவை ஏன் தேடுகிறாய்?
ஏற்கெனவே வந்துவிட்டது
அது உன் சட்டைப் பைக்குள். 
<><><>

Friday, March 9, 2012

எண்ணிச் சிந்திடுவோம்...



அன்புடன் ஒரு நிமிடம்... ( 1 )   

எண்ணிச் சிந்திடுவோம்... 

''மணி எட்டரை ஆச்சு, இன்னும் நீங்க புறப்படலியா கல்யாணத்துக்கு? என்ன இப்படி உட்கார்ந்திருக்கீங்க?  கிளம்புங்க, சீக்கிரம்!'' என்றாள் தலையை வாரிக்கொண்டு வந்த மீரா. அவள் தொடர்ந்து சொன்னது: ''ஒரு அவசரம், விசேஷம்னா உங்களை புறப்பட வைக்கிறதே எனக்கு பெரிய வேலையாப் போகுது!''

வினோத்  தன் லேப் டாப்பை மூடிவிட்டு எழுந்தான். ''எத்தனை மணிக்கு முகூர்த்தம்? மண்டபம் எது?''

''பத்தரை. ஸ்ரீநிவாஸ் மண்டபம்.''

''முகூர்த்தம் பத்தரைக்குத்தானே? இப்ப அரைமணியில ரெடியாயிட்டேன்னா ஒரு மணி நேரத்தில அங்கே போயிரலாமே?'' என்றான். அவன். தொடர்ந்து சொன்னது: ''நான் என்ன சும்மா தூங்கிட்டா இருக்கேன்? ரெண்டு வாரமாச்சு. பிராஜெக்ட் வேலை முடியலை. அதைத்தான் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.''

''சரி, சரி. இட்லி ரெடியாயிருக்கு. எடுத்து சாப்பிட்டுக்குங்க. நான் டிரஸ் பண்ணிக்கிறேன்.'' என்றாள் அவள். வேலை ரொம்ப பாக்கின்னா வீட்டிலிருந்து கொஞ்சம் பார்க்கலாமே என்று சொன்னது அவள்தான். ஆகவே அவளுக்கு உறுத்திற்று, நீ சொன்னதைத்தானே நான் செய்தேன் என்கிறானோ? அவள் தொடர்ந்து சொன்னது: ''ஆமா எங்க மாமா வீட்டுக் கல்யாணமாச்சே, அப்பத்தான்  பிராஜெக்டைப் பார்க்கிறதுக்கு உட்காருவீங்க!''

 ''உடனே அப்படிப் போயிருமே நினைப்பு? அதெல்லாமில்லே...'' என்று மறுத்தான். ஷேவிங்கை ஆரம்பித்தவன் தொடர்ந்து சொன்னது, ''நீதான் சில சமயத்தில அப்படி சிறுபிள்ளைத்தனமா நடந்துக்குவே, நானில்லை.''
......
இதற்குப்பின் இந்த உரையாடல் எப்படிப் போயிருக்கும் என்பதை ஊகித்து விடலாம். 

மேலே உள்ள உரையாடலில் எல்லா 'தொடர்ந்து சொன்னது'களையும் கவனிக்கவும். அவற்றை சொல்லுமுன்  ஒரு நிமிடம்,  ஒரே ஒரு நிமிடம், 'இப்ப இப்படி சொல்லணுமா? சொல்லலாமா?  சொன்னால் அது என்ன எதிர் விளைவை அல்லது பக்க விளைவை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்த்துவிட்டு, அப்படி சொல்லவா வேண்டாமா என்று முடிவெடுத்திருந்தால், அநேகமாக அந்த எல்லா 'தொடர்ந்து சொன்னது'களையுமே நிச்சயமாக தவிர்த்திருப்போம் இல்லையா? அந்த இடங்களில் அவை அவசியப்படவும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம். 

தான் சொல்வது சரி என்று வாதாடுகையில், ஒருவரை ஏதும் குறை சொல்லுமுன், அப்படி செய்திருக்கணும் என்று அறிவுரை வழங்குமுன் ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை யோசித்துவிட்டுப் பேசினால் உறவுகளும்  நட்புகளும்  எப்போதும் இனிக்குமே? எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை...! 
 
------------