''என்ன வாத்தியார் ஐயா? மெடிகல் செக் அப்புக்கு சென்னை போறீங்களாமே? கேள்விப்பட்டேன். கண்டிப்பா நம்ம பையன் வீட்டில தான் தங்கணும்.'' பரிவோடு சொன்னார் பொன்னையா.
நீலகண்டன் புன்னகைத்தார். ஏற்கெனவே சோமு , பரதன்,லோகநாதன் -- எல்லாருமே தற்போது சென்னையில் இருக்கும் அவரது பழைய மாணவர்கள் -- இவர்களின் பெற்றோரும் அவரை சந்தித்து, தங்கள் மகன் வீட்டில் தங்கிக் கொள்ளச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போயிருந்தார்கள்.
''ஆமா, உங்க மாணவன் வெங்கட்டும் அங்கேதானே இருக்கான்?'' என்றாள் மனைவி மரகதம்.
''ஆமா, அவங்கப்பா, அம்மா அவனோட அங்கேயே இருக்காங்க. இங்கே இருந்தா அவங்களும் வந்து என்னை அங்கே தங்கச் சொல்லியிருப்பாங்க''
ஊருக்குத் திரும்பியதும் மரகதம் ஆவலுடன் கேட்டாள், ''ஆமா, யார் வீட்டிலே தங்கினீங்க?''
''வெங்கட் வீட்டில் தான்!''
''என்னங்க, வீட்டுக்கு வந்து கேட்டுக் கொண்டவங்க பையன்களை விட்டுவிட்டு அவன் வீட்டில் எப்படி...?'' குழம்பினாள்.
''வெங்கட்டைத் தவிர மற்ற எல்லாரும் கல்யாணமானதும் பெற்றோரைத் தங்களோட அழைச்சிட்டுப் போகாம இங்கே கிராமத்திலேயே விட்டு வெச்சிருக்காங்க. பெத்தவங்களையே கவனிக்காதவங்க, என்னை எவ்வளவு தூரம் வரவேற்பாங்க? ஓர் ஆசிரியர் பார்க்க விரும்பறது தன் மாணவன் முன்னுக்கு வந்து நல்லா இருக்கிறதை மட்டுமில்லே, அவனைப் பெத்தவங்களோட சந்தோஷ முகத்தையும்தான். அதுக்கு நான் அங்கேதானே போகணும்?''
( 'குமுதம்' 28-09-2005 இதழில் வெளியானது )