ஓவிய விருட்சத்தை உலுக்கியவர்களில் ஒருவர்... மாடர்ன் ஆர்டின் தந்தை.
Pablo Picasso… Oct 25 பிறந்த நாள்!
20000 ஓவியங்களுக்கு மேல் வரைந்தவர், கவிதையும் தீட்டுவார் என்பது நி. பே. தெ. தகவல். 300 கவிதைகளுக்கு மேலேயே... ‘ஆசையின் வாலைப் பிடித்துக்கொண்டு’, என்றொரு நாடகமும்!
கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது இவரிடம். ‘உன் ஓய்வு நேரத்தைப் போல உற்சாகம் அளிக்கக்கூடியதாக ஒரு வேலையைத் தேடிக் கொள்!’ என்பதே அவர் அட்வைஸ். தன் மன அழுத்தத்தை தானே வென்றவர்.
‘அன்றாட வாழ்வின் அழுக்குகளை ஆத்மாவிலிருந்து அப்புறப்படுத்துவது தான் கலை... உற்சாகத்தை உருவாக்குவதே கலையின் நோக்கம்,’ என்பார். ‘படைப்பின் முக்கிய எதிரி அது சுவாரசியத்தை எதிர்பார்ப்பது.’
படைப்புத்திறனை வளர்த்துக் கொண்டே போனார் புதுப் புது ஸ்டைல் என்று. ஓவியக் கலையை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார். Braque -ம் இவருமாகப் பிரபலப்படுத்தியதுதான் Cubism.
‘குழந்தையாக இருக்கும்போது நான் பெரியவர்களை மாதிரி வரைவேன். ஆனால் ஒரு குழந்தை மாதிரி வரையக் கற்றுக் கொள்ள எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆகிவிட்டிருக்கிறது.’
‘மற்றவர்களெல்லாம் என்ன இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு ஏன் என்று கேட்டவர்கள். என்ன இருந்திருக்கக்கூடுமோ அதைக் கண்டு கொண்டு ஏன் கூடாது என்று கேட்டவன் நான்.’
இன்னும் சொன்னது...
‘கலை என்பது உண்மையை நாம் உணர வைக்கிற ஒரு பொய்.’
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். சிரமம் என்னவெனில் வளர்ந்த பிறகும் கலைஞனாக நீடிப்பதே.’
‘இசையும் கலையும் வாழ்க்கையை இன்னும் வசீகரமாக்கும் அலங்காரங்கள் அல்ல; அவை இல்லாமல் வாழ முடியாத அளவு வாழ்வின் ஆதார தேவைகள்.’
‘உங்களால் கற்பனை செய்ய முடிகிற எதுவும் நிஜம்.’
‘தேவையற்ற விஷயங்களை நீக்குவதே கலை.’
‘நான் தேடுவதில்லை, கண்டு கொள்கிறேன்.’
‘கலையை நீ உருவாக்குவதில்லை, அதை கண்டுபிடிக்கிறாய்.’
‘நம் ஆன்மாக்களில் இருந்து தினசரி வாழ்க்கையின் அழுக்கை கழுவுவதே அகற்றுவதே கலையின் நோக்கம்.’
‘இளமையாக ஆவதற்கு ரொம்ப காலம் பிடிக்கிறது.’
‘இந்த உலகம் அர்த்தமற்றதாக காணப்படுகிறது, நான் மட்டும் ஏன் அர்த்தமுள்ள படங்களை வரைய வேண்டும்?’
‘ஏகப்பட்ட பணம் வைத்திருக்கும் ஒரு ஏழையாக வாழ விரும்புகிறேன் நான்.’
‘வாழ்க்கையின் அர்த்தம் உங்கள் திறமையைக் கண்டுபிடிப்பது. வாழ்க்கையின் நோக்கம் அதை மற்றவர்களுக்கு கொடுப்பது.’
ஒத்திப் போடுவதுபோடுவது இவருக்குப் பிடிக்காத விஷயம். ‘அப்படியே விட்டுவிட்டு இறக்கத் தயாராக இருக்கிற விஷயங்களை மட்டுமே ஒத்தி போடுங்கள்!’ என்பார்.
பிக்காஸோவின் வீட்டுக்கு விஜயம் செய்த ஓர் பிரமுகர் சுற்றிப் பார்த்துவிட்டுக் கேட்டார், “ஆமாம், சுவரில் உங்க ஓவியம் ஒன்றையும் காணோமே, உங்களுக்குப் பிடிக்காதா?”
“ரொம்பப் பிடிக்கும்,” என்றார் பிக்காஸோ, “ஆனா அதெல்லாம் ரொம்பக் காஸ்ட்லியாச்சே?”
><><><