சின்னப் பையன் அவன். அப்பாவைப் போலவே குடிக்கு அடிமையாகிப்போன அம்மாவின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அதிலிருந்து மீட்க வேண்டும். என்ன செய்வது? அவள் முன் பல விதமாக நடிப்பான். பார்த்தவர்களை இமிடேட் பண்ணுவது அவனுக்கு கை வந்திருந்தது. அந்த நடிப்பையே பிற்பாடு அவன் தன் வேலையாக்கிக் கொண்டான். உலகமே புருவம் உயர்த்தி கைதட்டியது.
அந்தப் பையன்.. Marlon Brando... பிறவியே அவரைப் பிறவி நடிகர் ஆக்கிவிட்டது போல. இன்று பிறந்த நாள்!
கலகலவென்றிருந்த ஹாலிவுட் நடிப்பைப் பளபளப்பாக்கியது அவர் வருகை. நாடக மேடையில் இருந்து வந்தவருக்கு திரை தனி மேடை அமைத்தது. பிராண்டுக்கு எத்தனை கிட்டே வருகிறார் என்பது தான் ஒரு நடிகரின் நடிப்புக்கு அளவீடு என்றாயிற்று!
நடிப்பில் ஒரு பிராண்டை வகுத்தார் பிராண்டோ. இன்று வரை பின்பற்றப்படுகிறது ஹாலிவுட்டில் அது. மற்ற நடிகர்கள் பாதித்தது ரசிகர்களை என்றால் இவர் பாதித்தது நடிகர்களையும்! அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் 50 மாபெரும் திரை ஆளுமைகளில் நாலாமவர்.
மெதட் ஆக்டிங்கில் கிங்! ...என்று புகழப்படுவது அவருக்கு பிடிக்காத விஷயம். அவருடைய நடிப்பு, கேரக்டரை ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டு ஆற்றலுடன் வெளிப்படுத்துவதில் அந்த கேரக்டராகவே மாறிவிடும் சிவாஜி ரகம்.
அவர் மகளின் திருமணத்தன்று டான் கார்லியோனைச் சந்திக்க வந்து நிற்கிறார் பால்ய நண்பர். தன் மகளை அடித்து மூக்கைக் கிழிய வைத்த ரௌடிப் பசங்களை, அவள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவரும் முன் விடுதலையாகி வெளியே வந்துவிட்டவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று. ‘நீங்கதான் நியாயம் வழங்கணும், காட் ஃபாதர்!’ அமைதியாக கேட்டுவிட்டு, ‘முதலிலேயே என்னிடம் வந்திருக்கலாம் ஒரு நண்பனாக... சரி, பார்க்கிறேன்..’ என்று மரியோ பூஸோவின் அந்த கேரக்டரை மரிக்காத கதாபாத்திரமாக ஆக்கியவர்.
முனகியபடி பேசும்போதும் தெளிவாக பேசுவது அவரது தனி பாணி. ‘காட்பாதரி'ல் வாயில் டெண்டல் பீஸை அடக்கிக்கொண்டு அதை இன்னும் அழகாக… முதல் படத்தில் நடிப்பதற்கே (‘The Men’) ஆஸ்பத்திரியில் சென்று நோயாளியாக நாலைந்து வாரம் கழித்து பயிற்சி எடுத்துக் கொண்டவராயிற்றே!
பிரமாதமான டைரக்டர் கூட என்பதை வெளிப்படுத்தியது ‘One-Eyed Jacks’. அதன் டிரெய்லரே அலாதி. பத்துப் பதினைந்து ஸ்டில் வரிசையாக வரும். 16வது ஸ்டில் அசையும், ஒரு காட்சியாக. மறுபடி ஸ்டில்ஸ் தொடரும். திடீரென்று ஒரு ஸ்டில் அசையும் காட்சியாக.. த்ரில்லிங்...!
Tennessee Williams இன் ‘A Streetcar Named Desire’தான் அவரது ‘பராசக்தி.’ ‘Viva Zapata’, “On the Waterfront, ‘Last Tango in Paris’ ‘Julius Caesar’... எந்தப் படத்தைப் பற்றிச் சொன்னாலும் அவரின் அற்புத நடிப்பு அறிந்த விஷயம்.
சோபியா லாரனுடன் நடித்த ‘The Countess from Hong Kong’ படத்துக்கு டைரக்டர் சார்லி சாப்ளின். எலிசபெத் டெய்லருடன் நடித்த ‘Reflections in the Golden Eye.’ படத்துக்கு ஜான் ஹூஸ்டன்.
வாங்கிக் குவித்த அவார்டுகளைப் பட்டியலிட இடம் பற்றாது. ‘The Godfather’ படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைத்தபோது வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டது தெரிந்ததே...
முதல் முதலாக மில்லியன் டாலர் வாங்கிய நடிகர். (நடிகை, எலிசபெத் டெய்லர்) ‘Superman’ இல் அந்தச் சில காட்சிகளுக்காக இவர் வாங்கியது கதாநாயகன் ரீவ்ஸை விட அதிகம்.
பிராண்டோவின் ‘Mutiny on the Bounty’, டாஹிட்டி தீவில் படமாக்கப்பட்டது. அடுத்தாற்போல் ஒரு தீவை சொந்தமாக வாங்கிவிட்டார்.
அபார நடிப்பைத் தவிர சிவாஜியுடனான மற்றொரு ஒற்றுமை, ஒருமுறை கேட்டதுமே ஒப்புவிக்கும் திறமை.
காமெடி சென்ஸ் மிக அதிகம். ‘Bed Time Story’ இன் முதல் காட்சி. படைவீரர் டிரஸ்ஸில் ஒரு கிராமத்தில் நடந்து வரும் பிராண்டோ ஒரு வீட்டின் முன் நின்று அதை போலராய்டு கேமராவில் படம் எடுப்பார். வெளிவந்த படத்தை மண்ணில் போட்டுத் தேய்த்து பர்சில் செருகிக் கொள்வார். அந்த வீட்டின் கதவைத் தட்டி திறந்த இளம்பெண்ணிடம் படத்தை காட்டி, நான் சின்ன வயசில வாழ்ந்த வீட்டின் படம் இது, இந்த வீடு தானே? (அவள்: அட, ஆமா) கொஞ்சம் பார்க்கலாமான்னு சொல்லி அவளை அசத்தி விடுவார். படம் நெடுக டேவிட் நிவனுடன் அவர் அடிக்கும் காமெடி கூத்து! மற்றொரு காமெடி கலக்கல் நடிப்பு 'The Tea House of the August Moon.'
சொன்னவைகளில் சில: ‘நடிப்புத் திறமையை நாம எல்லோருமே வாழ்க்கையில் நினைத்ததை அடைய உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம்.’
‘வெற்றி பெற்றால் நடிப்பைப்போல ஒரு நல்ல வேலை இல்லை; தோல்வியுற்றால் அது தோல் வியாதியை விட மோசமானது.’
‘பிரமாதமான காட்சிகளை யாரும் கண்டு கொள்வதில்லை. பார்ப்பவர்கள் மனதைத் தாக்கும் காட்சிகளையே பிரமாதமாகப் பேசுவார்கள்.’