Saturday, February 13, 2021

நாவல் அரசர்...





பெண்களின் ஃபேவரிட் பிரபல ஆங்கில நாவலாசிரியர் யார்னு கேட்டால் சட்னு சொல்லிடுவாங்க சிட்னி ஷெல்டன்’னு. திறமையும் ஆற்றலும் கொண்ட பெண்களே அவரது நாயகிகள். எதிர்த்து நிற்பார்கள். போராடுவார்கள்.வெற்றி பெறுவார்கள்.

Sidney Sheldon (1917 - 2007) Feb. 11 பிறந்த நாள்!
பத்து வயதிலேயே கவிதை எழுதி பத்து டாலர் பெற்றவர். 18 நாவல்களும் 300 கோடி பிரதிக்கு மேல் விற்று விட்டன. டாப் 10 சேல்ஸ் உள்ள நாவலாசிரியர்களில் ஒருவர்.
17 வயதில் ஹாலிவுட் கதவை தட்டினார். கதைகள் எழுதப் போனவருக்குக் கிடைத்ததோ கதைகள் படிக்கிற வேலை, யுனிவர்சல் ஸ்டுடியோவில். ஸைடில் அவர் எழுதிய ‘ஸௌத் அஃப் பனாமா’வை 250 டாலர் தந்து வாங்கிக் கொண்டார்கள். அப்படியே நிறைய படங்கள்.
ஜெர்ரி லூயிஸ் & டீன் மார்டின் காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருப்பீர்களே, ‘You’re Never Too Young’ இல்? இவர் எழுதியது தான். அவர்களின் ‘Bardners’ ம்!
Cary Grant நடித்த ‘The Bachelor and the Bobby-Soxer’ ஆஸ்கார் வாங்கித் தந்தது இவர் கதைக்கு.
எம்.ஜி.எம்மில் வேலை பார்த்தது பொற்காலம். ஏகப்பட்ட படங்களுக்கு எழுதிய வேகத்தைப் பார்த்து இவரை அவர்கள் தயாரிப்பாளர் ஆக்கினார்கள். ஒருபக்கம் மேடைக்கும் எழுதி, எழுதிய ஆறில் ஒன்றுக்கு Tony அவார்டும் வாங்கினார்.
நாவல், to டி.வி. to சினிமா என்று வருவார்கள். இவரோ சினிமா, டிவி, நாவல் என்று தலைகீழாக. ஆனால் தலைசிறந்தவராக.
ஆம், லிவிங் ரூம்களை டி.வி. ஆக்கிரமித்ததும் சின்னத் திரைக்குப் போனார். முதல் சிரீஸே (The Patty Duke Show) மிகப் பிரபலம். ஏழு வருடம் எல்லா எபிசோடுகளையும் எழுதி அதிலும் ஒரு ரெக்கார்டு! எம்மி அவார்டு நாமினேஷனும் (‘I Dream of Jeannie’) வாங்கிவிட்டே ஒய்ந்தார்.
எப்படி எழுதுகிறார்? தினசரி 50 பக்கம். அதை மறுநாள் திறுத்துவதோடு 50 பக்கம் புதிதாக. 1000 பக்கம் போல வந்ததும் அதை பத்துப் பதினைந்து முறை திருத்தி எழுதுவார் சளைக்காமல். கடின உழைப்பு, ரெண்டே வார்த்தையில் சொன்னால்!
சினிமாவும் டி.வியும் சாதித்துவிட்டு நாவலுக்கு வந்தார். விறுவிறுப்பு, சஸ்பென்ஸ் 50:50 கலந்து அழகாய் எழுத, விற்பனைக்கு கேட்கணுமா? முதல் நாவலே 30 லட்சம் விற்று அவர் பெயரை எழுதியது. (‘The Naked Face’) அத்தியாய கடைசியில் கொக்கி போட்டு அடுத்ததுக்கு இழுப்பதில் மன்னர்.
அப்புறம் வரிசையாக டாப் செல்லர்ஸ். ‘Rage of Angels’. என்றதுமே நினைவுக்கு வருமே நம் ரா.கி.ரங்கராஜனின் 'ஜெனிஃபர்'? (என்னவொரு மொழி பெயர்ப்பு!) ‘Master of the Game’.. ‘If Tomorrow Comes’.. ‘The Best laid Plans’...
நாட்கணக்காக மெனக்கெடுவார் தகவல்களுக்காக. “நான் ஒரு இடத்தை பற்றி எழுதினால் அங்கே நான் போயிருந்திருப்பேன். ஒரு ஹோட்டலைப் பற்றி எழுதினால் அங்கே நான் சாப்பிட்டிருப்பேன். வாசகரை ஏமாற்ற எல்லாம் முடியாது,” என்பார், சினிமாவை விட நாவல் எழுதுவதில்தான் அதிக சுதந்திரம் இருப்பதாக கருதும் இவர்.
‘The Other Side of Midnight’ நாவலை எழுதியவர் ‘The Other Side of Me’ என்று சுயசரிதையை எழுதினார். கட்டாயம் படியுங்கள். எளிய வாக்கியங்கள். ஈர்க்கும் நடை. எழுதி முன்னேற விரும்பும் எவரும் படிக்க வேண்டியது.
நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் அவரிடம் வந்து, ‘நான் வக்கீல் ஆனதற்குக் காரணம் உங்கள் ரேஜ் அஃப் த ஏஞ்சல்ஸ் படித்ததினால்தான்,’ என்றார். தன் நாவல் விற்பனையைவிட இதையே அர்த்தமுள்ளதாக நினைக்கிறார்.
ஒரு காரக்டர் கேட்கும் அவர் நாவலில்: ‘தங்களை நிரூபித்துக் காட்டாத வரையில் பெண்களைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள், ஆனால் ஆண்களையோ அவர்கள் படு முட்டாள்கள் என்று நிரூபணமாகாத வரையில் உயர்வாக மதிப்பிடுகிறார்கள். என்ன நியாயம் இது?’
சொன்னதில் இரண்டு:
‘இரண்டே சாய்ஸ் உங்களுக்கு: ஓடி ஒளிந்து கொண்டு உங்கள் துன்பங்களுக்கு இந்த உலகத்தைக் குறை கூறிக் கொண்டேயிருக்கலாம். அல்லது எழுந்து நின்று நீங்கள் யாரென்று நிரூபிக்கத் தீர்மானிக்கலாம்.’
‘நீங்கள் வெற்றி பெற உங்களுக்கு நிறைய நண்பர்கள் வேண்டும். மிகப் பெரும் வெற்றி பெற நிறைய எதிரிகள் வேண்டும்.’