Friday, February 22, 2013

சூடாக இருக்கையில்...


அன்புடன் ஒரு நிமிடம் - 26. 



ழைப்பு மணி விடாது ஒலிக்க அபிஜித் ஓடிச்சென்று கதவைத் திறந்தான்.

முகமே சொல்லிற்று வந்தவர் தாங்கொணா ஆத்திரத்தில் உழல்கிறார்  என்பதை. தாத்தா  எழுந்து ஹாலுக்கு வந்தார் அவரை வரவேற்று உட்கார வைக்க. அபிஜித் உள்ளே சென்று அம்மாவிடம் தெரிவிக்க அவள் டீ தயாரிக்க ஆரம்பித்தாள்.

வந்தது தாத்தாவின் பால்ய நண்பர் சொக்கலிங்கம்.

உடனே ஒரு முடிவு எடுத்தாகணும்! என்றார் எடுத்த எடுப்பிலேயே. என்ன வார்த்தை பேசிட்டான்!

சாத்வீகன் ஒன்றும் சொல்லவில்லை.

கொஞ்ச நேரம் அவரைப் பேச விட்டபின் தெரிந்தது அவருக்குத் தன் பிஸினஸ் பார்ட்னருடனான சர்ச்சை என்று. கம்பெனியைத் தேடிவந்த ஏதோ ஒரு ஆர்டரை இவர் எடுக்கத் தயங்கிவிட்டார் என்று அவர்...

“,,,,நான் என் உழைப்பை தண்ணியா சிந்தலேன்னா வளர்ந்திருக்குமா கம்பெனி இத்தனை உயரத்துக்குன்னு சொல்றான். அப்ப நான்? அன்னிக்கு நான் என் பணத்தை வாரி இறைக்கலேன்னா மட்டும்?” பொரிந்து தள்ளினார்.

அதற்குள் டீ வரவே, “நல்ல சூடா வந்திருக்கு. டீயை சாப்பிடு! என்றார் தாத்தா. வாயில் ஒரு மிடறு விட்ட அவர் இனிப்பு கம்மியா இருக்கே?” என்று சொல்ல உள்ளிருந்து அம்மாவின் குரல்: “இதோ சுகர் எடுத்திட்டு வர்றேன்!

அவர் தன் சீறலைத் தொடர்ந்தார். இத்தனை வருஷமா எத்தனை ஆர்டர் உறுதி பண்ணியிருக்கேன்? எனக்குத் தெரியாதாக்கும்?. இன்னும் இருக்கு எனக்குக் கேக்கிறதுக்கு நிறைய! கேக்கத்தான் போறேன், இன்னிக்கே!...

இதை அப்படிப் பார்க்கக் கூடாது. அவனும் ஒரு தொழில் அக்கறையில் சொல்றதுன்னு தான் இதையெல்லாம் எடுத்துக்கணும்.! என்று சாந்தப்படுத்த முயன்றார் சாத்வீகன். அவரோ இன்னும் ஆக்ரோஷமாகவே இருந்தார். டீக்கு சர்க்கரை வந்தா என்றும் பார்க்கவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் குமுறல் நீடித்தது.

டீ கொஞ்சம் ஆறி விட்டது பார், குடி சீக்கிரம்!

எடுத்துக் குடித்தார் அவர்,

இனிப்பு சரியாயிருக்குதா?”

ஆமா. இப்ப சரியா இருக்கு. அதான் சுகர் சேர்த்திட்டாங்களே?” என்றார்.

சேர்த்திட்டாங்களா? நான் இப்பதானே வர்றேன்?” அப்போது தான் அம்மா கையில் ஸ்பூனில் சுகருடன் வந்து நிற்க, அவர் விழித்தார். மறுபடி ஒரு மிடறு அருந்திவிட்டு, “சரியா இருக்கே இனிப்பு. நிஜமாவே நீ இப்பதான் சர்க்கரை கொண்டு வர்றியா? அப்புறம் எப்படி?”

காரணம் நான் சொல்றேன்,” என்றார் தாத்தா. டீ ரொம்ப சூடாக இருக்கும்போது இனிப்பு சற்றுக் குறைவாய்த்தான் தெரியும். நானே பலமுறை பார்த்திருக்கேன்.

சொக்கலிங்கம் சற்றே அதிசயமாகப் பார்த்தார்.

எப்ப டேஸ்ட் பண்றோம்கிறதைப் பொறுத்து சுவைகூட மாறித்தான் போகுது! என்றார் சாத்வீகன், “சூடா இருக்கும்போது தவறாய்த்தான் தெரியுது இல்லையா?”

அவரிடம் ஒரு மௌனம். தாத்தா எதைச் சொல்கிறார்?

டீயை அருந்தினார் சொக்கலிங்கம்..

அதுவும் சரிதான்! என்று எழுந்து கொண்டார்.

எதுவும் சரிதான் என்று சாத்வீகன் கேட்கவேயில்லை.

('அமுதம்' நவம்பர் 2012 இதழில் வெளியானது)
(படம்: நன்றி: கூகிள் )

Monday, February 11, 2013

முதல் உதவி...


அன்புடன் ஒரு நிமிடம் - 25

முதல் உதவி...

வரையே கேளுங்கள்,” என்று சொல்லிப் போய்விட்டாள் யாழினி. என்ன நடந்தது? மூட் அவுட் ஆன மாதிரி இருக்கிறானே கிஷோர்?” என்று கேட்ட மாமாவிடம்.

புருவத்தை அவன் பக்கம் உயர்த்தினார் ராகவ். சொல்ல ஆரம்பித்தான் கிஷோர். எல்லாம் அந்தப் பையனால!

யாரு?”

அதான் எங்க வீட்டுக்கு பேப்பர் போடறான் இல்லியா அவன்!

ஓ அவனா? எங்க ஏரியா கூட அவன்தான். என்ன பண்ணினான்?”

பின்னே என்ன மாமா? சின்னப் பையன், அவனுக்கு இத்தனை அலட்சியமா? எவ்வளவு தைரியம் இருந்தால்? காலையில குளிச்சு நீட்டா டிரஸ் பண்ணிட்டு ஆபீஸ் கிளம்பறேன். என் மேலே வந்து மோதி சே! சட்டையெல்லாம் பாழ்! மழையில நனைஞ்சிட்டு மேலே சேறாக்கிட்டு வந்திருக்கான்! அதை அப்படியே என் மேல அப்பிட்டான்! வந்துது பாருங்க ஒரு கோபம் எனக்கு! அவனை உண்டு இல்லேன்னு பண்ணிட்டேன். வாய்க்கு வந்தபடி திட்டிட்டேன்!

த்சொ! த்சொ! அப்புறம்?”

மறுபடி சட்டை மாற்றி லேட்டா ஆபீஸ் போய்... இன்னிக்கு பூரா மூட் அவுட் நானு!! என்றவன் தொடர்ந்து அவனைத் திட்டிக் கொண்டே இருந்தான்.

கூல் டௌன்! அதான் நல்ல திட்டிட்டே இல்லே, விட்டுத் தள்ளு! ஆமா, அவன் பேர் என்ன சொன்னே

யாருக்குத் தெரியும்?”

அவனை ஆசுவாசப் படுத்தினார்கள் இருவருமாக.

மறுநாள்... மாமாவைத் தேடிக்கொண்டு வந்தான் கிஷோர்.

நாளைக்கு சாயங்காலம் ஷார்ப்பா ஐந்து மணிக்கு ஹோட்டல் பார்க் வந்திடுங்க. அன்னிக்கே சொன்னேனே?. எங்க வெடிங் அனிவர்சரி பார்ட்டி. மறந்துடாதீங்க.

நாளைக்கா? ஐயோ என்னால முடியாதே?”

ஏன் மாமா?”

ஒரு முக்கியமான விஷயம். வரதனை அழைச்சிட்டு அந்த கம்பெனி எம்.டியைப் பார்க்கணும்.

யார் அது வரதன்?”

ஒரு நாலு வருஷமாத் தெரியும். அப்பா வெச்சுட்டுப் போனதெல்லாம் கடன்தான். அம்மா நோயாளி. ரெண்டு தங்கைங்க. இவன்தான் படிக்க வெச்சு கரையேத்தணும். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டிருந்தவன் படிப்பை நிறுத்திட்டு பாவம் கிடைச்ச வேலையை எல்லாம் செய்திட்டு குடும்பத்தை பராமரிக்கிறான், தினம் தினம் போராடி!
அப்பப்ப ஏதாச்சும் கடன் கொடுத்து உதவுவேன். வேண்டாம்னுதான் சொல்லுவான். இப்ப கூட அவனை எனக்குத் தெரிஞ்ச கம்பெனியில் அறிமுகப்படுத்தி வைக்கத்தான் நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருக்கேன், ஏதாச்சும் அசிஸ்டண்ட் வேலை வந்தா கூப்பிடற மாதிரி...

எத்தனை துயரமான பரிதாபமான வாழ்க்கை! அதில் எப்படியோ எதிர் நீச்சல் போட்டு... கிஷோர் நெகிழ்ந்து போனதில் ஆச்சரியமில்லை. அவனுக்கு உள்ளம் பரபரத்தது.

பாவம் மாமா! நானும் ஏதாச்சும் உதவணுமே அவனுக்கு!.

உதவறதெல்லாம் இருக்கட்டும், அவனைக் கஷ்டப் படுத்தாமல் இருந்தால் போதாதா? ஏதோ தெரியாமல் தவறிழைத்து விட்டால் மன்னித்தால் போதாதா?”

என்ன மாமா அப்படி சொல்றீங்க?”

அவன்தான் ரெண்டு வருஷமா உன் வீட்டில பேப்பர் போடற பையன். காலையில நீ ஏகத்துக்குத் திட்டினியே அந்தப் பையன்!
<<>>
('அமுதம்' நவம்பர் 2012 இதழில் வெளியானது)

Friday, February 1, 2013

இருப்பும் விருப்பும்...


அன்புடன் ஒரு நிமிடம் - 24


இருப்பும் விருப்பும்

நாலு நாள் லீவு. யசோதாவும் நானும் யுவனை அழைச்சிட்டு அங்கே வர்றோம். மெயில்லே தகவல் அனுப்பியிருந்தேனே, பார்த்திட்டீங்களா?” என்று ஆரம்பித்து தன் வருகைத் தேதி பற்றி அப்பாவுக்கு சுருக்கமாகத் தெரிவித்த கௌதம், ‘அம்மாவை முறுக்கு சீடை எல்லாம் செய்ய ஆரம்பிக்காம ஃப்ரீயா இருக்க சொல்லுங்க. நாலு நாளும் ஊரிலே தான், உங்களோடு தான்.... என்றவன்,  “அப்புறம் உங்க காரை மாத்தி புதுசா...சரி, எல்லாம் நேரில வந்து பேசிக்கிறேன்! சட்டென்று வைத்துவிட்டான் போனை.

போனதும் காரை மாற்ற சொல்லணும் வேறு பெரிய வண்டி வாங்கிக் கொடுக்கணும், என்று நினைத்துக் கொண்டான். அநியாயத்துக்கு பழசாகிவிட்டது அந்த வண்டி.

சொன்னால் கேட்க மாட்டார். அதுக்கென்ன, நல்லாதானே ஓடிட்டிருக்கு என்பார்.

அவன் ரெண்டு லகரத்துக்கு மேல் சம்பளம் வாங்குகையில் அவர் அந்த பழைய காரைக் கட்டிக்கொண்டு அழுவதை அவனால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

ஊரில் வந்து இறங்கியவனுக்கு முதல் நாளே ஏமாற்றம் காத்திருந்தது. வெளியே கிளம்ப புறப்பட்டவன் ஷெட் காலியாக இருந்ததைப் பார்த்து  புருவம் உயர்த்தினான்.

அதுவா? காரை செர்வீஸுக்கு விட்டிருக்கேன், ஒண்ணு ரெண்டு சின்ன வேலை இருக்குனு சொன்னான். நாலு நாள்ல வந்துடும்.என்றார் சாத்வீகன்.

சரிதான், அப்ப இந்த நாலு நாளும் கார் இல்லையாக்கும்?” ஜீரணிக்க கொஞ்சம் நேரமாயிற்று.

அதுக்கென்ன, பைக் இருக்கே?” என்று சாவியை நீட்டினார்,

பரவாயில்லே இதாவது இருக்கே? அதை வைத்துக் கொண்டு சமாளித்தான்.

மூன்றாவது நாள் அதுவும் பாதையில் ஏதோ உபாதையில் உட்கார்ந்து கொண்டது. இவன் பின்னால் உட்கார ஹோட்டலுக்கு பார்சல் வாங்க சென்றிருந்தார் அவர். ஆனமட்டும் முயன்று பார்த்தார்கள். ஊஹூம், அசைவதாயில்லை அது.

அப்பாவும் மகனுமாக வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். வீட்டுக்கு.

வொர்க் ஷாப்பிலிருந்து ஆளைத் தருவித்து அதை சரி செய்ய ஒரு நாள் ஆகிவிட அன்றைக்கு எந்த வண்டியும் இல்லாமல் கஷ்டமாயிருந்தது. வெளியே போக வர ரொம்ப சிரமமாயிற்று. 

மறுநாள் அந்த பைக் ஓட ஆரம்பித்தபோது அப்பாடா என்றிருந்தது. அதிலேயே அப்பாவுடன்,தோப்புக்கு,  அம்மாவுடன் கோவிலுக்கு, சமயத்தில் பையனுடன் லைப்ரரிக்கு என்று அதை ஐந்து நிமிடம் கூட சும்மா நிற்க விடவில்லை.

கிளம்பும் நாள். ரயில்வே ஸ்டேஷனில் எல்லாரும். சூட்கேஸ்களை உள்ளே ஏற்றி விட்டு எல்லாரும் அமர்ந்தபின் வெளியே அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

பேச வேறு விஷயம் இல்லாமல் யோசித்தபோது அவருக்கு நினைவு வந்தது. “அன்னிக்கு வர்றேன்னு போன் செய்தப்ப அந்தக்காரை மாத்தி புதுசான்னு நம்ம காரைப் பத்தி ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே, என்னடா அது?” என்று கேட்டார்  

அதுவா?” யோசித்தபடியே அவரை ஒரு நிமிடம் உற்று நோக்கினான்.

ஒண்ணுமில்லைப்பா, லீவ் இட்! என்றான்.

காரே இல்லாதப்ப, அந்த பைக் கூட எத்தனை இதமா, இன்னும் அன்னியோன்யமா இருந்தது என்று மீண்டும் நினைத்துக் கொண்டான்.

அவர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். 
<<<>>>
('அமுதம்' நவம்பர் 2012 இதழில் வெளியானது)