அன்புடன் ஒரு நிமிடம் - 19.
மாத்தி நினைக்காதீங்க!
காலையில்...
சின்ன மகன் அரசுவை உட்கார
வைத்து கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தார் வாசு. விருந்தினர்
வந்திருந்த போது அவன் நடந்துகொண்ட விதம் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
“அந்த மாமா உனக்கு சாக்லேட்
கொடுத்தாரில்ல? ஏன் தாங்க்ஸ் சொல்லலே?”
“சொல்லலே!”
என்றான் அவன். புதிதாக அவன் பார்க்காத தினுசில் இருந்ததால் ஆவல் அதைப் பிரிப்பதில்
பாய, அவருக்கு தாங்க்ஸ் சொல்ல மறந்து போனான்.
“எப்ப யார் எது கொடுத்தாலும் தாங்க்ஸ்
சொல்லணும்! சொல்லிக் கொடுத்திருக்கேன்ல? சரி, அவங்க பொண்ணு உன்கிட்ட சைக்கிள் கொடுன்னு கேட்டதுக்கு நோ, நோன்னு சொல்லிட்டியே, ஏன்?”
அவனுக்குக் கொடுக்க
தோன்றவில்லை, கொடுக்கவில்லை. அவ்வளவுதான். அதை
சொன்னா அப்பா இன்னும் திட்டுவார். ஆகவே மௌனமாக இருந்தான், பதில் சொல்லாமல்.
திருப்பித் திருப்பிக்
கேட்டும் மௌனம்.
“அப்பா கேட்டா இப்படித்தான் பதில்
சொல்லாமல் இருக்கிறதா? இதான் நீ படிச்ச மானர்ஸா?”
மழலை சற்றே மாறியிருந்த வயது
மகன் மலங்க மலங்க விழித்தான். நன்றாகத் திட்டினார் இவர்..
பார்த்துக் கொண்டேயிருந்தாள்
பாட்டி.
மாலையில்...
வாசு வீட்டுக்குள் நுழைந்ததுமே
அழைத்தார் தாத்தா.
“என்னப்பா?”
“வர்ற புதன் கிழமை உன் பொண்ணுக்குப்
பிறந்த நாள் ஆச்சே? ஞாபகம் இருக்கா?”
“ஓ, ஜானகி
சொன்னாளே!”
“சரி, அவளுக்கு
டிரஸ் எடுத்திட்டியா?”
“இன்னும் இல்லேப்பா. எடுக்கணும். கொஞ்சம் வேலை ஜாஸ்தி.
நாளைக்குக் கடைக்கு போகணும்.”
“சீக்கிரம் எடுத்துடு. அப்புறம் கேக்
சொல்லிட்டியா?”
“ஓ வழக்கம்போல சேகர் கடையில் ப்ளம்
கேக் சொல்லிட்டேன்.”
“ஆமாமா, அவளுக்கு
அதானே பிடிக்கும்? ஒரு கிலோ தானே?”
“இல்லேப்பா,
அரை.தான் சொன்னேன்.”
“அது எப்படி போதும்? அவ பிரண்ட்ஸே அரை டஜன் பேர் வருவாங்க. ஒரு கிலோ ஆக்கிடு அதை.”
ரெண்டு வினாடி மௌனத்துக்குப்
பின், “சரிப்பா!” வந்தது.
பார்த்துக் கொண்டேயிருந்தாள்
பாட்டி.
“ம்..” முனகிக்
கொண்டாள்.
நேராக அருகில் வந்தாள்.
“நீங்க ரெண்டு பேர் பண்றதும்
சரியாப்படலியே?” என்றாள்.
“அரசுக்கு இன்னும் வயசு நாலு ஆகலை.
அவன்கிட்டே போய் ஒரு வளர்ந்த பையனோட நடத்தையை அவன் அப்பா ஆன நீ எதிர்பார்க்கிறே.
வாசு வளர்ந்து ஒரு பெரிய பிஸினஸ் மேனாக இருக்கிறான். அவன்கிட்டேபோய் நீங்க ஒரு குழந்தையை
எதிர்பார்க்கீறீங்க. எப்படி அவர்களால் அதை பிரதிபலிக்க முடியும்? குழந்தையிடம் குழந்தையை எதிர்பாருங்க. வளர்ந்து ஆளானவனை ஒரு முழு
மனிதனாகப் பார்க்கப் பழகுங்க.”
அவர்கள் யோசிக்க
ஆரம்பித்தார்கள்.