Wednesday, January 18, 2012

பகிர்ந்திடப் பகர்ந்திட..

முதலில் சின்னப் பெண் அஞ்சனாவை அழைத்து வந்து விட்டு பையனை ஸ்கூலிலிருந்து 'இட்டார' கிளம்பினாள் என் பொண்ணு. வழக்கம் போல டெடி பியரையும் கையில் எடுத்துக் கொண்டு அம்மா கூட நடக்க ஆரம்பித்தது அந்த மூன்று வயது சுட்டி.

எப்பவும் போலவே அந்த லண்டன் தெருவில் ஆள் நடமாட்டம் குறைவாயிருந்தது. குளிர் நாடு ஆயிற்றே? கையைப் பிடித்துக் கொண்டு அம்மாவும் பொண்ணுமாக நடக்க... தினமும் பார்க்கிற கட்டிடங்கள்,வழக்கமாய்ப்எதிர்ப்படுகிற நபர்கள் தாம் என்றாலும் எதிர்பாராத சம்பவம் அன்று நடந்துவிட்டது. 

அந்தப் பெரியவர் அழைத்து வரும் மூன்றடி உயர நாய் அஞ்சனாவை நோக்கிப் பாய அதிர்ந்து விட்டாள் அவள் அம்மா. பாய்ந்த வேகத்தில் குழந்தை கையிலிருந்த டெடி பியரைக் கவ்வி இழுக்க அஞ்சனாவோ ஆபத்தை அறியாமல் ''வேணும் வேணும்,'' என்று  தன் பக்கம் இழுக்க நாய் ஜெயித்து பொம்மையைக் கொண்டே போய் விட்டது. நாய் கடிக்கும் என்பது தெரியாததால் அஞ்சனா அஞ்சாமலும் தெரிந்ததால் அவள் அம்மா நடுங்கியும் போனார்கள்.

நல்ல வேளை, கடிக்கவில்லை.  நகக்  காயம்? குளிருக்காக நாலைந்து டிரஸ் முழுக்க கவர் செய்து போட்டு விட்டிருந்ததால் படவில்லை போல..

ஒரு முறைக்கு நாலு முறை ஸாரி சொன்னார்  பெரியவர். நாயிடமிருந்து அதை மீட்க முடியவில்லை. இவளோ ஒரே அழுகை. அதற்கான விலையை தந்து விட முன்வந்தார்.
''அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்,  பையனை அழைச்சிட்டு நாங்க இந்த வழியா தான் திரும்ப வருவோம். உங்க நாயிடமிருந்து பொம்மையைத் திரும்ப பெற முடிஞ்சதுன்னா வாங்கி வையுங்கள்.''

நம்பிக்கை இல்லாமலும், நடந்தது நடந்தாச்சு இனி 'போனது போயாச்சு' என்பதும் சுலபப் படலாம் என்ற எண்ணத்திலும், அவருக்கு ஆறுதலாக வார்த்தைகளை உதிர்த்து விட்டு அகன்றாள்.

வரும்போது அவர்கள் அதே இடத்தில்... சந்தோஷ ஆச்சரியமாக நாய் பொம்மையைத் திருப்பித் தர முன் வந்திருந்தது. அப்பாடா! அதை - நாய் வாய்ப் பற்றியதை திரும்ப தன்  தாய்  கைப் பற்றுகையில் அஞ்சனாவுக்கு எத்தனை மகிழ்ச்சி!

''பாவம் அந்த டாக், அதுக்கும் இந்த பொம்மையோட விளையாட ஆசையா இருந்திருக்கு!'' என்று அவள் அண்ணன் சொல்ல சிநேகத்தோடு பார்த்தாள்.  

வீட்டுக்கு வந்து அதை சுத்தம் செய்து அவளுக்கு கொடுத்தாள் என் மகள். சந்தோஷம் முகத்தில் தெறிக்க அவள் சொன்னது: ''அம்மா...  டாக் இந்த டெடி பியரை அஞ்சா (அஞ்சனா) கூட ஷேர் பண்ணிக்கிட்டது!''

'உன்னோட டாய்ஸை மற்ற பசங்களோட ஷேர் பண்ணி விளையாடணும்,'  என்று சொல்லிய தடவைகள் உண்டு. அது அவள் மனதில் ஆழமாகப் பதிந்து, இப்போது  அழகாக வெளிப்பட்டிருக்கிறது!    

<><><>


Thursday, January 12, 2012

அறிந்தும் அறியாமலும்..



 ''என்னங்க இது ரொம்ப நல்ல இடம், நல்ல மனுஷங்கன்னு இந்த இடத்திலே போய் நம்ம பொண்ணுக்கு பேசி முடிச்சீங்களே, இப்ப கார், பணம்னு ஒண்ணொண்ணா கறக்கிறாங்களே?'' எல்லா வருத்தத்தையும் கணவரிடம் கொட்டினாள் கோமதி.


ராகவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ''தரகர் சொன்னதை நம்பி நானும் ஏமாந்துட்டேன் கோமு.  ரொம்ப படிச்சவங்க, விசால இதயம் கொண்டவங்க... அப்படி இப்படின்னு அடுக்கினார். ஆஹா நம்ம அபிதாவோட ராசி, ஒரு அருமையான சம்பந்தம் அமைஞ்சிருக்குன்னு நினைச்சிட்டேன்.''

''ரிடயராகிற நேரத்திலே நம்ம ஒரே பொண்ணுக்கு கல்யாணம்! கையிலே கிடைக்கிற தொகை முழுசும் அதுக்கே போயிடும் போல இருக்கு!''

 கல்யாணத்துக்கு முன் தினம் பணத்தையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார்கள் ராகவன் தம்பதி. கொடுத்து விட்டு, ''அவ்வளவு தானே?'' என்றார் பவ்யமாக.   

''இன்னும் ஒரே ஒரு விஷயம் நீங்க செய்ய வேண்டியது பாக்கி இருக்கு சம்பந்தி.... இந்தப் பணத்தை உங்க பேரில் பாங்கில் டெபாசிட் பண்ணி மாசா மாசம் வட்டி வர்ற மாதிரி பண்ணிடுங்க. இந்தக் காரை உங்க வீட்டுக்கு ஓட்டிட்டுப் போயிடுங்க. தாம் தூம்னு செலவு பண்ணி பொண்ணு கல்யாணத்தை நடத்திட்டு அப்புறம் கஷ்டப்படற எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கேன். அந்த நிலைமை  உங்களுக்கு வரக் கூடாதுன்னு தான் இப்படிச் சொன்னேன்.''

நெகிழ்ந்து போனார்கள் அந்த அக்கறையில்!

('குமுதம்'  13-07-2005  இதழில் வெளியானது.)