Sunday, July 10, 2011

வழியனுப்ப வந்தவள்...



ற்று நேரத்தில் புறப்படவிருந்த ரயிலில் அமர்ந்திருந்தான் மகேஷ். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஸ்டேஷனுக்கு வரவில்லை. அப்பா இல்லை. 

சீட்டில் அமர்ந்ததிலிருந்தே அந்த வயதான பெண்மணியைக் கவனித்திருந்தான். பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு அவ்வப்போது கையை அசைப்பதும், 'பத்திரமா போயிட்டு வாடா கண்ணு,' என்று சொல்வதுமாக இருந்தாள். ஆனால் அவள் அதை யாருக்கு சொல்கிறாள்? ஊகிக்க முடியவில்லை. ஆவல் உந்த எழுந்து சென்று அவனிருந்த கம்பார்ட்மெண்டை ஆராய்ந்தான். இந்தப்பக்கம் யாரும் அவள் கையசைப்புக்கு பதில் கொடுக்கிற விதமாக இல்லை.


அதற்குள் ரயில் புறப்பட்டு விட அப்போதும் அவள் கையசைத்து, பத்திரம்.. பத்திரம் என்று சொல்ல.. யார்? யாரை வழியனுப்ப வந்திருக்கிறாள் இவள்? விசுவ ரூபமாய் கேள்வி.


இதற்கிடையில் இவனை சீட்டில் காணாமல் தேடிய டிக்கட் பரிசோதகர், ''என்ன தம்பி, இப்படி சுத்திக்கிட்டே இருந்தீங்கன்னா பெர்த் லிஸ்டை எப்படி செக் பண்றது?'' என்று கேட்டவர், பேசப் பேச கொஞ்ச தூரத்தில் சற்று பழக்கமாகி விட்டார். விஷயத்தை சொன்னான்.


''ஒ அந்த பொம்பளையா?''


''ஆமா சார். அவ யாரை வழியனுப்ப வந்தாள்னு ஒரு ஆர்வத்தில் பார்த்தேன்...''


''யாரையுமே இல்லை. ஒரு நாள் அவள் இதே ரயில்வே ஸ்டேஷனில், வேலை கிடைச்சிருக்குன்னு மும்பைக்குப் போன அவள் மகனை சந்தோஷமா வழியனுப்ப வந்திருக்கிறாள். அவன் தகாத நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக் கடத்தலில் இறங்கி கொலையாயிட்டான். அந்த ஷாக் அவளுக்கு. அந்த வருத்தம். தினம் பிளாட்பாரம் டிக்கட் வாங்கிட்டு வந்து மும்பை செல்லும் ரயிலருகே வந்து நிற்பாள். இதே கையசைப்பு. இதே வசனம். பத்திரமா போயிட்டு வாடா...''


அதற்கு மேல் அவனால்  கேட்க முடியவில்லை. மனதை எதுவோ அழுத்திற்று.


அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இறங்கிக் கொண்டான். நடக்க ஆரம்பித்தான் வீட்டை நோக்கி.
நண்பன் ஒருவன் ஊருக்கு வந்தபோது இவனிடம் குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியதில் மயங்கி அவனைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தவன்  தன் தாயையும் அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை.