Friday, December 23, 2022

போதும் யுகத்துக்கு...

 அமுத சு ரபி...

அவர்தானா அது? திகைக்க வைக்கும் இன்னொரு அமுதக் குரலைத் தன் ’ஏற்கெனவே மதுரக் குரலு’க்குள் வைத்திருக்கிறார் ரஃபி.


‘Woh Jab Yaad Aaye..’ பாடலை அவர் பாடியிருக்கும் லாவகம்! லக்ஷ்மிகாந்த் பியாரிலால் முதல்முதலாக இசையமைத்து இசையுலகைக் கலக்கிய படத்தில். (’பாரஸ்மணி’)
அதே 1963 இல் வெளியான இந்தி நெஞ்சில் ஓர் ஆலயத்தில் (தில் ஏக் மந்திர்) அதே ரஃபி பாடிய ‘Yaad Na Jaaye…’வில் அந்த மதுரக் குரலைக் கேட்டு மனம் கசிந்து முடிப்பதற்குள் இதில் அசந்துபோனோம்.
முகமது ரஃபி. மென்குரல் அமுத சுரபி... இன்று பிறந்த நாள்.
இந்திப் படவுலகின் பொற்காலம் அதன் இசைக் கோலம். அதன் பெரும் பகுதியின் டாப் ஸிங்கராக அவர். சுண்டியிழுக்கிற அந்தக் குரலை வர்ணிக்க ‘மெஸ்மரைசிங் வாய்ஸ்’ என்றால் ஸர்ப்ரைசிங்காக இருக்காது.
ஷம்மி கபூருக்கும் பாடுவார். ஜானி வாக்கருக்கும் ஏற்பப் பாடுவார். அவர்தான் முகமது ரஃபி. ‘கும்நாம்’-இல் ”ஹம் காலே ஹை தோ கியா ஹுவா..”வில் மெஹ்மூதுக்கு ‘சித்தாடை கட்டிக்கிட்டு..’ ஸ்டைலில் பாடி விளாசியதை மறக்கமுடியுமா? "The she I love is a beautiful, beautiful dream come true…” என்று அதை அசத்தலாக ஆங்கிலத்திலும் பாடியிருந்தாரே..
டூயட்டில் ரெண்டொரு வரிதான் தனக்கு என்றாலும் இமேஜ் பார்க்காமல் இசை துவட்டுவார். “Aankhen Hi Aankhen Mein Ishara Ho Gaya..”’ பாடலில் பல்லவி மட்டுமே அவருக்கு. என்ன ஸ்டைலாக அதை நம் காதுக்கு வழங்கினார்!
‘யாஹூ’ என்கிற வார்த்தை பிரபலமடைந்தது இவரது அந்த பாடலினால். (Junglee) தொடர்ந்து ‘Professor’ ‘Evening in Paris’ ‘Kashmir ki Kali’ என்று ஷம்மி கபூரின் ஆஸ்தான வாய்ஸ் ஆகிக் போனார்.
‘அவர் இல்லாமல் என் பாடலே இல்லை!’ சொன்ன ஓ.பி.நய்யார் ஒருமுறை இவர் ரெக்கார்டிங்குக்கு லேட்டாக வந்தார் என்ற வருத்தத்தில் இவருக்கு பாடல் தருவதை நிறுத்தி விட்டார். ‘Tumsa Nahin Dekha’ ‘Aar Paar’ ‘Ek Musafir..’ படப் pop பாடல்களைக் கேட்ட நமக்கு அந்த pep சரியான நஷ்டம். வேதனை தந்த மற்றொரு பிரிவு ரஃபி - லதா டூயட்ஸ்.
“Chahungha Main Tujhe…” இவர் பாடும்போது கூடவே விரைந்தோடும் நம் மனம். லஷ்மி பியாரியின் உயிர்த்துடிப்பான பாடல்களுக்கு உடல் கொடுத்தது இவர் குரல்.
பின்னால் இவரை ஓவர்டேக் செய்த கிஷோர் குமாருக்கு ஆரம்ப காலத்தில் குரல் கொடுத்திருக்கிறார். Shararat… இல் வரும் “Ajab Hai…” ஒரு முத்து.
அந்தப் பதினான்காம் நாள் நிலவை யாரால் மறக்க முடியும்? “Chaudwin Ka Chand Ho…” முதல் பிலிம்பேர் அவார்ட். மறுபடி ரவியின் இசையில் ‘நீல் கமல்' பாடலுக்கு முதல் நேஷனல் அவார்ட். (“Babul Ki Duvayen Lethi..”)
டூயட் பாடல்களில் கிசு கிசுக்கிற தினுசில் ஓர் அன்னியோன்யம் தோன்றும் என்றால் சோகப் பாடல்களில் மனதைப் பிழிகிற உருக்கம் மிஞ்சி நிற்கும்.
ஓய்ந்து விட்டார் என நினைக்கையில் ‘நான் யாருக்கும் இளைத்தவர் இல்லை ‘ படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடி அவர் யாருக்கும் இளைத்தவர் இல்லை என்று கண்டு (கேட்டுக்) கொள்ள வைத்தார். ('Hum Kisise Kum Nahin')
“துஜே மைன் சாந்த் கஹ்தா தா..” என்று எழுந்து, “மகர் உஸ் மேம் பி தாக் ஹை...’ என்று இறங்கி, “துஜே இத்னா ஹி கஹ்தா ஹூன்…” என்று ஆர்ப்பரித்து “தும்ஸே பியார் ஹை.. தும்ஸே பியார் ஹை..” என்று மெல்ல அடங்கும்போது அந்த சங்கர் ஜெய்கிஷன் பாடலை ஒரு சாட்டையாக சொடுக்கி நம் பிளஸ் வைஜயந்தியின் உணர்வுகளைக் கட்டிப் போடும் அழகு!
ஒரு ரஃபி தான். போதும் யுகத்துக்கு.

Wednesday, December 21, 2022

இரண்டு முறை...

அப்பா ஹாலிவுட்டில் மிகப் பிரபல நடிகர், ஆனால் அவர் வாங்குவதற்கு முன் ரெண்டு முறை ஆஸ்காரை வாங்கி விட்டார் மகள்!


Jane Fonda! பிரபல நடிகர் Henry Fonda வின் மகள். இன்று பிறந்த நாள்!
Tall Story என்ற படத்தில் முதல் முதலாக நடித்தார் அப்புறம் அவர் வெற்றிக்கதை ஒரு tall story!
1971 & 78 இல் ஆஸ்கார். ஹென்றிக்கு 1982 இல் தான் கிடைத்தது.
அப்பாவும் மகளும் அப்பாவும் மகளுமாக நடித்த ‘On Golden Pond’ தப்பாமல் பாராட்டை அள்ளிற்று.
பதினேழு மில்லியன் பிரதி விற்றது இவரது ஏரோபிக்ஸ் விடியோ 'Workout'. உடற் பயிற்சிப் பிரியர்.
நன்கொடைப் பிரியரும்கூட. ஹார்வர்ட் யூனிவர்சிடிக்கு அதுவரை யாரும் தராத 12.5 மில்லியன் டாலரை அள்ளித் தந்தவர்.
சொன்னது:
'சரியான வழி என்று நான் அறிந்த பாதையில் நடக்கத் தொடங்கும்போது என்னை முழுமையாக எடுத்துச் செல்கிறேன்.'
‘குறிக்கோளுடன் வாழ்வது முக்கியம் என நினைக்கிறேன் இல்லாவிடில் நாம் விதியின் வசத்துக்கு ஆளாக நேருமில்லையா?’

Thursday, December 15, 2022

முந்திச் சிந்தித்தவர்...


‘இப்ப எனக்குப் புரிகிறது,’ என்றான் உலகின் கடைசி மனிதன்.’
பிரபல Scince Fiction எழுத்தாளர் Arthur C Clarke -இன் ஒரு வரி இது.
கப்பல் பாரம் சரியா இருக்க, அடைத்துவந்த குப்பை நியூஸ் பேப்பர்களில் வந்த விஞ்ஞானக் கதைகளைப் படித்தவர், பின்னாளில் பிரபல Scince Fiction எழுத்தாளரானார்.
Arthur C Clarke.. இன்று பிறந்த நாள்!
அரும்பியது விஞ்ஞானம் மீது காதல் எனினும் விரும்பியதைப் படிக்க வசதி இல்லாத வறுமை. ஆடிட் க்ளார்க் ஆக வேலை பார்த்தபடி எழுத ஆரம்பித்து…
ஸாட்டிலைட் வைத்து உலகம் பூரா டெலிகாஸ்ட் செய்து சௌகரியமாக உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோமே, அதைக் கண்டு பிடிப்பதற்கு 20 வருஷம் முன்பே இவர் எழுதிவிட்டார் அதைப் பற்றி, ‘Extra Terrestrial Relays’ என்ற தன் கட்டுரையில்!
விண்வெளிப் பயணங்களின் சாத்தியதை பற்றி 1950களிலேயே எழுதிவிட்டார். ஏன், விண்கல விஞ்ஞானிகளே ஆலோசனை கேட்க இவரிடம் வருவதுண்டு.
‘2001 A Space Odyssey’! எல்லாரும் பார்த்து ரசித்தோமே அந்த பிரம்மாண்ட ஹாலிவுட் படம்! அது 1951-இல் இவர் எழுதிய ‘The Sentinel’ என்ற சிறுகதை. 'இந்தப்படம் உங்களுக்குப் புரிந்தால் எங்களுக்குத் தோல்வி,' என்று விளம்பரப் படுத்தினார்கள். 'நிறைய கேள்விகளை எழுப்பவேண்டும் அது!'
'ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, நான் தனுசு. நாங்க சந்தேகப் பிராணிகளாச்சே?' என்பார். எப்படி ஜோக்?
கொஞ்சம் இவரது Quotes...
‘மொத்தத்தில் இரண்டு சாத்தியதை தான் உண்டு: பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோம் அல்லது இல்லை. இரண்டுமே ஒரே அளவு பயங்கரமானது; திகில் ஊட்டுவது.’
‘எந்தப் புரட்சிகரமான முன்னேற்றமும்நான்கு படிகளில் அமைவது. 1. அது மடத்தனம், என் நேரத்தை வீணாக்காதே. 2. சுவாரசியமா இருக்கிறது, ஆனால் ரொம்ப முக்கியமில்லை. 3. அது ஒரு நல்ல ஐடியா என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். 4. நான் தான் அதை முதலில் சொன்னேன்!’
‘இந்த ஒரு காலக்ஸியில் மட்டுமே 87000 மில்லியன் சூரியன்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் மனிதன் எதிர்கொள்வது இயலாத காரியம். கோள்கள் ஒருநாள் அவன் வசமாகலாம். ஆனால் நட்சத்திரங்கள் மனிதனுக்கானவை அல்ல.’
‘இன்டர்நெட்டில் இருந்து தகவல் பெறுவது என்பது நயாக்ரா நீர் வீழ்ச்சியிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் பெறுவது.’
‘தகவல் அறிவு ஆகாது. அறிவு விவேகம் ஆகாது. விவேகம் தொலைநோக்கு ஆகாது. ஒன்றிலிருந்து ஒன்று... எல்லாமே வேண்டும் நமக்கு.’
‘இருப்பவர்களுக்கும் இறந்து போனவர்களுக்குமான விகிதத்தை வைத்துப்பார்த்தால் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் முப்பது ஆவிகள் நிற்க வேண்டும்!’
‘இப்போது நான் ஒரு அறிவியல் விற்பன்னர். அதாவது எதைப்பற்றியும் எனக்கு முழுமையாக தெரியாது.’
‘அடுத்து என்ன செய்வது என்பதே நிஜத்தில் வாழ்வின் ஒரே பிரசினை.’
‘உங்களால் என்ன முடியும் என்று கண்டுபிடிக்க ஒரே வழி அதையும் தாண்டி முயற்சிப்பது தான்.’