Saturday, January 30, 2016

சரியான பதிலடி... (நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 98

”எனக்கும் பேசத் தெரியும் மாமா.  இதுக்கு பதிலடி கொடுக்காமல் நான் விடவே மாட்டேன், ” என்றவரைப் பார்த்து சிரித்தார் சாத்வீகன்.  "நீ இன்னும் விஷயத்தையே சொல்லலை. அதுக்கு முந்தி எதுக்கு பஞ்ச் எல்லாம்?”

சொன்னார் கல்யாணராமன். 

அவரிடம் இருந்த ஓர் ஐந்து செண்ட் நிலம். கையிலிருந்த ரெண்டு லட்சம் ரூபாயில் தன் கனவு வீட்டைக் கட்டத் துவங்கினார். பாங்கில் லோன் கிடைத்தது. ஆனால் காண்ட்ராக்டர் சொதப்பியதால் நஷ்டப்பட்டு விட்டார். அந்த நபரிடம் வேலை தெரிந்த சரியான ஆட்கள் இல்லை. தேவையான சாமான்களோ வசதியோ இல்லை. அனுபவமும் இல்லை. அதனால் பிரசினைகள் எழுந்து வேலை பாதியில் முடங்கி... திணறிப் போனார்.   நிறையவே பணம் இழப்பு. ஒரு வழியாக கட்டி முடிப்பதற்குள்... 

சொல்ல வந்தது அதுவல்ல. அவரின் சித்தப்பா மகன் ஜகதீசன் இவரைப் பற்றி உறவினர் ஒருவரிடம் பேசும்போது, ”என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்  நான் பார்த்து முடித்துக் கொடுத்திருப்பேன். என் மைத்துனரே ஒரு நல்ல காண்ட்ராக்டர். அவரை வைத்து அழகாக கட்டிக் கொடுத்திருப்பேன்,” என்று சொல்லியிருக்கிறார். அந்த உறவினர் எல்லாரிடமும்  அதை சொல்வார் எனத் தெரிந்தே.

தாங்க முடியாத கோபம் இவருக்கு. ஏனென்றால் அவரிடம் ஒன்றுக்கு இரு முறை போய், தான் வீடு கட்ட வேண்டும் என்றும் அதற்காக சரியான காண்ட்ராக்டர் தேடி  அலைந்து  கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அப்போது தன் மைத்துனர் பற்றியோ தான் உதவி செய்வது பற்றியோ மூச்சு விடவில்லை. அந்த சந்திப்புகளை அப்படியே மறைத்துவிட்டு இவரைக் குற்றம் சொல்ல வேண்டுமானால்...

“என்ன வேணா சொல்லலாம்னு நினைச்சிட்டு இருக்கிறார் அந்த ஆளு. அவரு மச்சினனுக்கு அந்த வேலையை எடுத்துக் கொடுக்க  இஷ்டமில்லை போல அவருக்கு. அதனால பழியைத் தூக்கி என் மேல போடறாரு. என்னை இளிச்சவாயன்னு நினைச்சுட்டு... நீங்களே சொல்லுங்க மாமா. இவர் வேஷத்தைக் கலைச்சு பாடம் படிச்சுக் கொடுக்க என்னால முடியுமா முடியாதா?”

சாத்வீகன் புன்னகைத்தார். ”கண்டிப்பா முடியும். ஆனா  நான் சொல்றேன்,  நீ அப்படியே இருந்து விடு. அவரு இதில ஜெயிச்சதாவே இருக்கட்டும்.  காலம் போகப் போக உன் வருத்தம் குறையும். அவருக்கு உறுத்தல் ஆரம்பித்துவிடும். இப்ப பாரு, நீ கொஞ்ச நாளில் இதை மறந்துடுவே. ஆனா அவரு ரொம்ப நாளைக்கு இதை மறக்க முடியாது.  உன்னைப் பார்க்கிறப்ப எல்லாம் அவரு மனசில் ஒரு கஷ்டம் தோன்றும். உனக்குப் பதில் உன் மௌனம் செய்யும் வேலை அது.  நிச்சயமா ஒரு நாள் அவரு உன்னை சரிப்படுத்த முயலுவார். அப்ப நீ ஜெண்டிலாக சொல்லும் ஒரு, ’பரவாயில்லே!’ இருக்கே, அது அவருக்கு படிச்சுக் கொடுக்கும் பாடம். அர்த்தமுள்ள பாடம்.”

“அப்படீங்கறீங்க?” கல்யாணராமன் மோவாயைத் தடவினார்.  “ நல்ல விஷயமாத் தான் தெரியுது...” எழுந்தார். ”ஒரு வேளை அந்த மாதிரி ஒரு உறுத்தலோ வருத்தமோ அவருக்குத் தோணாமப் போயிட்டா... அதுக்கும் சாத்தியதை இருக்கில்ல?’

தோள்களைக் குலுக்கினார் இவர். ”கொஞ்சம் இருக்கிறதுதான். அப்படிப்பட்ட ஒருவரா அவரு இருந்தால் அவரோட பழக்கமோ சினேகமோ உனக்குத் தேவையா என்ன? உன் மனசில அவருக்கு இடம் கிடைக்காமலேயே போயிடும். அவ்வளவுதானே? அவருக்குத் தான் நஷ்டம் அது.  ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்த்தோம்கிற திருப்தியோட  நீ நிம்மதியா இருக்கலாம்."
('அமுதம்’  டிச. 2014 இதழில் வெளியானது)

Friday, January 29, 2016

நல்லதா நாலு வார்த்தை - 63


'நல்ல பழக்கங்களுக்கு அடுத்தபடியாக
நாம் குழந்தைகளுக்கு அளிக்கும் 
மிகச் சிறந்த விஷயம்
நல்ல ஞாபகங்களே.'
- Sydney Harris
('The best things you can give children,
next to good habits, are good memories.')
<>

'தன்னை வெல்ல முடிகிற மனிதனை
எதிர் நிற்கும் ஆற்றல் 
எதற்கும் இல்லை.'
<>
- Louis XIV 
('There is little that can withstand a man 
who can conquer himself.')
<>

'நிச்சயமாக நம்புவதற்கு முதலில்
ஐயுறுதலுடன் ஆரம்பிக்க வேண்டும்.' 
- Stanislaus I
('To believe with certainty, we must begin with doubting.')
<>

'என்ன என் வாழ்க்கை, நான்
யாருக்கும் இனி 
உதவியாக இல்லையெனில்.'
- Goethe
('What is my life if I am no longer useful to others.')

<>

’வளர்ச்சியும் பலமும் 
வருவது
அடுத்தடுத்து முயன்று 
அரும்பாடு படுவதினாலேயே.’
- Napoleon Hill
(’Strength and growth come only through 
continuous effort and struggle.')
<>

'உங்கள் காயங்களை 
விவேகமாக
உருமாற்றிக் கொள்ளுங்கள்.’
- Oprah Winfrey
('Turn your wounds into wisdom.')
<>

’மிகச் சிறந்த கல்வியால் 
திறக்க முடியாத கதவுகளை
நற்குணங்கள் திறக்கும்.’
- Clarence Thomas
('Good manners will open doors 
that the best education cannot.’)

><><><><

Tuesday, January 26, 2016

அவள் - (கவிதைகள்)

239
எல்லாக் கவிதை சேர்ந்தும்
சொல்லாமல் விட்ட 
பொல்லா அழகு.

240
உன் மனதிலிருந்து பெற்றுக்கொண்டதோ 
தன் வெண்மையை 
தும்பைப்பூ?

241
சங்கமிக்கிற என் 
சகல கவிதைகளையும் 
சகித்துக் கொள்ளும் ஒரே நபர்.

242
உன்னை நினைத்ததும் 
முகிழ்த்த கவிதை
உன்னைப் பார்த்ததும் நாணி 
ஒளிந்துகொண்டது.


243
என்னிடமிருந்த பாதிக் கவிதை
உன்னைக் கண்டதும்
ஆ என் மறு பாதி என்று
ஓடிச்சென்று ஒட்டிக்கொண்டது.

244
அதெப்படி உன்னால்,
ஆஹா என்ன ஒரு நுட்பம் என நான்
வியப்பதற்கு முந்தின செகண்ட் வரை 
அப்பாவியாகக் காட்சியளிக்க முடிகிறது?

245
என் பார்வை 
உன்னை அடையுமுன்
உன் புன்னகை
என் மனதை.

><><><

Monday, January 25, 2016

நம்பிக்கை நம் மீது...(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 97
  
”இப்பவாவது கிளம்பினாயாயே?” என்றான் தியாகு. பைக்கை வெளியே எடுத்தான் வினோத் சிரித்தபடியே.
ரொம்ப நாளாக அவன் மனைவி கேட்டிருந்தாள் பெட் ரூமில் ஒரு ஏ.சி. வைக்கவேண்டுமென்று. நண்பனுடன் அதை வாங்கி வரப் புறப்பட்டான். வாசலில் பைக் தட்டிற்று. லேசாக சாய்ந்தது பிடிக்கு நிற்காமல் சரிந்தது. தடுமாறி கூடவே விழத்தெரிந்த வினோதை இவன் பிடித்துக்கொண்டான். 
”சே, தடங்கல் ஆயிட்டுதே... அடுத்த வாரம் போகலாம்.”  நிறுத்திவிட்டான் வினோத் பயணத்தை.
”அதெல்லாம் ஒண்ணுமில்லே,  கிளம்புடா!” சொன்னால் கேட்கணுமே? யமுனா முகம் வாடிற்று
”இல்லேடா, சகுனம் சரியில்லே. நிச்சயமா இன்னிக்கு நமக்கு விஷயம் ஒழுங்கா நடக்காது.”
”எத்தனை மாசமாச்சு அவள் கேட்டு. இன்னும் தள்ளிப்போட்டா சரியில்லை! நீ கிளம்பித்தான் ஆகணும்.”
அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அரை மனதாக கிளம்பினான் வினோத்.
வழி நெடுக புலம்பல் ”பாரு ஏதாச்சும் ஆக்சிடெண்ட்ல மாட்டப்போறோம்...” 
கடையில்... ”உட்காருங்க சார்.” ஒவ்வொரு மாடலாக விளக்கியபோது புறப்பாட்டின் தயக்கம் எல்லாம் மறந்து கலகலப்பாக ஆகிவிட்டான் வினோத். ”பாரு, இதுதான் பெஸ்ட் ஆஃபர்னு நினைக்கிறேன்,” என்று ஒரு மாடலை தியாகுவிடம் காட்டினான். ”என்னடா எங்கேயொ பார்த்துட்டு நிற்கிறே?”
அந்த நேரம் அவன் செல் போன் அழைக்க தியாகு பேசினான், ”அப்படியா இதோ வர்றேன். அட்ரஸ் சொல்லுங்க.”
”என்னடா மேட்டர்?”
”ஒண்ணுமில்லே, நீ பார்த்துக் கொண்டிரு. இதோ வந்திடறேன்.” 
அதேபோல் வந்துவிட்டான். குஷியாகப் பேசிக்கொண்டு விஷயத்தை முடித்து வீட்டுக்கு வரும்போது மணி நாலு. 
”இதுக்குப்போய் தயங்கினீங்களே, இப்ப போன விஷயம்  நடந்து முடிஞ்சதா இல்லியா?” முகம் மலர யமுனா.
”ஆமாமா,” என்றான், ”இருந்தாலும் இப்படி ஒரு விஷயம் கரெக்டா நாம் புறப்படும்போது நடக்கிறப்ப எப்படி அதை ஒரு சகுனமாக எடுக்காமல் இருப்பது? பைக் சரிந்து விழுந்து.. ஏதோ நீ பிடிச்சதால கீழே விழாம தப்பி...” 
”அதை ஏன் நல்ல முறையில் எடுத்துக்கக் கூடாது? ஒரு சின்ன சறுக்கல் நேர்ந்தது, ஆனா அதிலேர்ந்து தப்பினோம்னா அதை நல்லபடியா எடுக்கலாமே ஏதும் பிரசினை நேர்ந்தாலும் அதிலேர்ந்து வெற்றிகரமா மீள்வோம்னு? அப்படித்தான் எதையும் நம்பிக்கையோடு எடுத்துக்கணும். எந்த ஓர் விஷயமா போனாலும்  நாம எதிர்பார்க்கிற மாதிரியேவா எல்லாமும் நடக்கும்? சின்னதோ பெரிதோ பிரசினை வரத்தான் செய்யும். அதை சமாளிக்கிறோமாங்கிறதுதான் முக்கியம். அதுக்கு நம்மிடம் இருக்கவேண்டியது  நம் மீதான நம்பிக்கை. நடக்கிற சின்ன தடங்கல்கள் மீதல்ல.” என்றவன் சிரித்தான் 
”என்னடா சிரிக்கிறே?’
”இப்ப கூட ஒரு விஷயம் நடந்தது. போகிற வழியில உன் செல்லைத் தவற விட்டுட்டே. கடையில பேசிக்கிட்டிருக்கும்போதே உன் பாக்கட்டைக் கவனிச்சு நான் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் ஆனேன். உன்கிட்ட சொன்னா அவ்வளவுதான், நான் அப்பவே சொன்னேன்னு ஆரம்பிச்சுடுவே. கம்முனு இருந்தேன். எனக்கு ஒரு போன் வந்ததில்லையா, செல்லை கண்டெடுத்த  நல்ல மனிதர்தான் கூப்பிட்டது,  அதில கடைசியா  நீ பேசியிருந்த என் நம்பரைப் பார்த்துட்டு! ஓசைப்படாம போய் வாங்கி வந்துட்டேன்.”
”ஓ அதைத்தான் அங்கே  டேபிளில் வெச்சுட்டேன்னு என்கையில கொடுத்தியாக்கும்?” 
”ஆமா, வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்லிக்கலாம்னு.” 
”ஆஹா, நல்ல பாயிண்ட். இதை மறக்கவே முடியாது!” 
”இனி அப்படித் தயங்கவும் முடியாது,” என்றாள் அவள்.  
(’அமுதம்’ டிச.2014 இதழில் வெளியானது) 

Saturday, January 23, 2016

நல்லதா நாலு வார்த்தை...62


'சந்தோஷமாயிருக்க 
ஒருவருக்கு பாதுகாப்பு வேண்டும்,
ஆனால் உற்சாகம் என்பது 
விரக்திக் குன்றுகளின் விளிம்பிலும் 
பூவாக உதித்திடக் கூடியது.’
- Anne Morrow Lindbergh
('For happiness one needs security, but joy can
spring like a flower even from the cliffs of despair.')
<>

’சாவின் பயம் நம்மை 

வாழ்வதிலிருந்து தள்ளி வைக்கிறது,
சாவதிலிருந்து அல்ல.’
- Paul Roud
(’The fear of death keeps us from living, not from dying.’)
<>

'செயத்தக்க ஏதேனும் 
செய்த ஒருவரைக் காட்டுங்கள் எனக்கு,
நான் உங்களுக்குக் காட்டுகிறேன் 
இடர்ப்பாடுகளை வென்ற ஒருவரை!'
- Lou Holtz
('Show me someone who has done something worthwhile,
and I'll show you someone who has overcome adversity.')
<>

'ஒடித்துப் போடுகிறது எல்லோரையும் 
இந்த உலகம்.
ஒரு சிலர் மட்டும் பின்னர்
பலமாகிறார்கள் 
ஒடிக்கப்பட்ட இடங்களில்.'
-Ernest Hemingway
('The world breaks everyone, and afterward,
some are strong at the broken places.')
<>

மனதின் மென்மைக்கு நிகரான 
வசீகரம் இல்லை.'
- Jane Austin
('There is no charm equal to tenderness of heart.')
<>

வெற்றித் தோற்றம்போல்
வெற்றி பெறுவதொன்றில்.'
-Christopher Lasch
('Nothing succeeds like the appearance of success.')
<>

’தனியாகப் பிறக்கிறோம் நாம்,
தனியாக வாழ்கிறோம், 
தனியாக இறக்கிறோம்.
நம் அன்பாலும் நட்பாலும் மட்டுமே
அந்தக் கணத்தில் 
நாம் தனியாக இல்லை என்ற
மாயையை உருவாக்க முடியும்.’
- Orson Welles
'We're born alone, we live alone, we die alone.
Only through our love and friendship can we
create the illusion for the moment that we're not alone.'

><><><

Wednesday, January 20, 2016

அவள் - கவிதைகள்


232
அவர்கள்
பேசிக் கொண்டிருக்கட்டும்,
நான் சற்று இளைப்பாறுகிறேன்.
நம் விழிகள்.

233
தொப்பென்று விழுந்தேன்
உன்னுடைய கனவிலிருந்து.

234
உன் வெட்கத்தைப் பிடுங்கி 
ஜேபிக்குள் மறைத்து வைத்து விட்டேன்
சற்று நேரத்துக்கு.

235
ஒரு வினாடி 
கண்ணை மூடட்டுமா?
உன்னைப் பார்த்து விடுகிறேன்.

236
தென்றலுக்கு 
இந்தப்பக்கம் நான்
அந்தப்பக்கம் நீ.

237
அதற்கப்புறம் 
எந்தச் சிலையையும் செதுக்கவில்லை
அந்தச் சிற்பி.

238.
மௌனத்தால் பேசுகிறாய்
பேச்சில் மௌனிக்கிறாய்.
><><

Monday, January 18, 2016

அந்தத் திருப்தி... (நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம்... 96

ராத்திரி பதினோரு மணிக்கு லேப்டாப்பையும் திறந்து வைத்துக் கொண்டு கையில் போனையும் எடுத்துக் கொண்டு என்ன செய்கிறார் சாத்வீகன் என்று எட்டிப் பார்த்தார் மனைவி மைத்ரேயி.
கேள்வியை முகத்தில் படித்து, ”கௌதமோடுதான் பேசிக் கொண்டிருக்கேன்,” என்றவர் , ”ஆமாடா. காலையிலேர்ந்தே ட்ரை பண்றேன்.. திறக்கமாட்டேங்குது! ... ஆமா, என்னோட மடிக் கணினியேதான்.” என்றார் ஸ்பீக்கர் போனில்.
"ஓஹோ, ரீஸ்டார்ட் செஞ்சு பார்த்தீங்களா?"
"பார்த்துட்டேன். ஆகலே."
"என்ன மேக், மாடல்னு சொல்லுங்க.”
அவர் அதைப் பார்த்து சொன்னார்.
அடுத்த நிமிடமே அவனிடமிருந்து மளமளவென்று வழிமுறைகள்.  அதை க்ளிக் பண்ணுங்க, இதை அழுத்துங்க....
செய்தார்.
”இப்ப திறக்குதா பாருங்க.”
திறந்தது.
”ரொம்பத் தாங்க்ஸ்டா, பட்டுன்னு சொல்லிட்டே,  வொர்க் அவுட் ஆயிட்டுதே..சூபர்! ”
‘புது லேப்டாப் ஆச்சே, ஆடிப்போயிட்டார் உங்கப்பா!”
”ஏம்பா, அதான் நாங்கல்லாம் இருக்கோமில்லே?
”பார்த்தியா பத்து நிமிஷத்தில சால்வ் பண்ணிட்டான்...”
போனை வைத்தார். முகத்தில் பெருமிதம் பொங்க மனைவியைப் பார்த்தார். 
”சரிங்க ஆனா  ஒரு நேரம் போல இருக்குமா? இப்ப அவன் என்ன வேலையில இருந்தானோ? இப்படி திடீர் திடீர்னு அவனைக் கூப்பிட்டு வேலை கொடுத்தால்...” என்ற மனைவி மெதுவாக, ”ஆமா,  நீங்களும்  நாலு விஷயம் தெரிஞ்ச  நபர்தானே? லேப்டாப்ல ஒரு ப்ராப்ளம்னா நீங்களே முயற்சி பண்ணி தீர்க்க முடியாதாக்கும்?”
”ஏன் முடியாமல்... கூகிள்ல இதைப் போட்டுப் பார்த்து வழி என்னன்னு தெரிஞ்சுக்கிட்டும் சரி பண்ணிடலாம்...”
’ஐய, பின்னே ஏன் இப்ப பிள்ளையை மண்டையை உடைக்க வெச்சுட்டு?...   அதை செஞ்சிருக்கலாமேங்க?” 
”அதைத்தானே இப்ப அவனும் செய்து சொன்னான்?” என்றார் கூலாக.
”அப்படியா, அப்ப நீங்க ஏன் செய்யலே?”
”ஒரு காரணம் இருக்கு. ஒரு பிரசினையில  நான் ஒண்ணும்  பண்ண முடியாம அவன்கிட்ட கேட்க, அவன் அதுக்கு ஒரு வழி சொல்லி,  அதை சரிசெய்து கொடுக்கிறதில அவனுக்கு ஒரு திருப்தி எற்படுமில்லையா? அதுக்காகக்த்தான்!” 
”அழகாவே யோசிச்சிருக்கீங்க...”
(’அமுதம்’  டிசம்பர் 2014 இதழில் வெளியானது)


Friday, January 15, 2016

நல்லதா நாலு வார்த்தை... 61


'பெறுவதன் வழியை
அளிப்பது திறக்கிறது.'
- Florence Scovel Shinn
('Giving opens the way for receiving.')
<>

'உங்களின் சிறந்ததைச்
செய்து கொண்டிருப்பீர்களானால்
தோல்வியைப் பற்றி வருந்த 
நேரமிருக்காது உங்களுக்கு.'
- H. Jackson Brown, Jr.
('If you're doing your best, you won't have
any time to worry about failure.')

<>

’தியாகம் செய்யாமலும் 
விடா முயற்சி இன்றியும் 
வெற்றி பெறும் எவரையுமே 
காணப் போவதில்லை நீங்கள்.’
- Lao Holtz
('You aren't going to find anybody that's
going to be successful without making a
sacrifice and without perseverance.')
<>

'வாழும் பாங்கில் 
காலத்துடன் நீந்திச் செல்.
ஒழுக்க நியதிகளில்
கல் போல் நில்.'
- Thomas Jefferson
('In matters of style, swim with the current;
in matters of principle, stand like a rock.')
<>

'நேர்மையான உழைப்பில் 
இருக்கிறது மரியாதை.
- Grover Cleveland
('Honour lies in honest toil.')
<>

’மௌனம் என்பது 
தரைக்கு வருகிற 
சொர்க்கத்தின் 
சிறு துண்டு.’
- E. Psichari
('Silence is a bit of heaven that comes down to earth.')

<>

'நன்றி சொல்வோம் கண்ணாடிக்கு, 
நம் தோற்றத்தை மட்டுமே 
நமக்குத் தெரியப்படுத்துகிறது 
என்பதற்காக.’ 
- Samuel Butler
('Let us be grateful to the mirror for
revealing to us our appearance only.')

><><><

Monday, January 11, 2016

அவள் - கவிதைகள்


225
வெகு நேரம் என்னோடு
விழித்திருந்தன கவிதைகள்
உன் ஒரு ‘உம்’முக்காக.
><

226
அவசரக் குடுக்கை 
ஆக இருக்கிறேன் எப்போதும்
உன்னிடம் பேசுவதில்.
><

227
பறந்து திரிந்த 
உன் மீதான நினைவுகள் 
இதயக் கூடடைந்துவிட்டன
><

228
அவள் 
மெல்லச் சிரித்தாள்,
என்னை 
வேகமாக இழந்தேன்.
><

229
உனக்காகக் காத்திருக்கையில் 
விரிந்த கணங்களைக்
கணக்கிட்டால்
ஒரு மாமாங்கம் தாண்டுகிறது.
><

230
உனக்கும் எனக்குமேயான 
நினைவுகள்
ஒரு யுகத்துக்குப் போதுமாய்!
><

231
தூங்கிடும்போதும் 
நீங்கிடாத உன் சிறு
புன்னகை.

><><

Saturday, January 9, 2016

எடையற்ற சுமை...(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம்... 95

மாமாவையும் அழைத்துக் கொண்டு அந்த பதிவர் கூட்டத்துக்கு போகலாம் என்று வந்திருந்தான் கிஷோர். மணி ஐந்து. தெரியும் இந்த நேரத்தில் அவர் தன் சிறிய தோட்டத்தில் இருப்பார் என்று. தோட்டக் கலையில் அவருக்குள்ள ஈடுபாடு அவனறிவான்.
”இரு, இதோ செடிகளுக்குத் தண்ணீர்... இப்ப முடிஞ்சிடும்...”
அவன் ஒரு செயரைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.  பார்த்தால்...
குழாயிலிருந்து தண்ணீர் மள மளவென்று டிரம்மில் பாய்ந்து கொண்டிருந்தது. கைக்கு ஒன்றாக இரு வாளிகளை வைத்துக்கொண்டு அந்த டிரம்மிலிருந்து நீரை மொண்டு ஒவ்வொரு செடியாகச் சென்று ஊற்றிக் கொண்டிருந்தார்.
என்ன இவர் இப்படி...
அருகில் வந்ததும் கேட்டான். ”என்ன மாமா, இப்படி கஷ்டப்பட்டு வாளிகளை சுமந்துகொண்டு?  இப்பதான் விதவிதமா கிடைக்குதே... ஒரு அரை இஞ்ச் ஹோஸ் வாங்கிக்கொண்டு விட வேண்டியதுதானே? எத்தனை ஈசியா இருக்கும்? இப்படி பாரம் சுமக்க வேண்டாமில்லையா? குழாயில செருகிட்டா அது பாட்டுக்கு பாயுமே?” 
”ஒஹோ?’
”எத்தனை மீட்டர் நீளம் வேணும்னு சொல்லுங்க. நாளைக்கே ஒண்ணு வாங்கிட்டு வர்றேன்.”
"அப்படீங்கறே? சரி, ஒரு நிமிஷம்..."  அவனை உள்ளே அழைத்துப் போனார் ராகவ். முன் அறையைத் திறந்து காட்டினார்.  முப்பதடி நீளமிருக்கும் ஹோஸ் ஒன்று சுருட்டி வைக்கப் பட்டிருந்தது. “நான்தான் எடுத்து உள்ளே போட்டிருக்கேன்...”
இவன் விழித்தான். ”பின்னே ஏன்?”
”இதை செருகிட்டா அதுபாட்டுக்கு பாயும். சும்மா நின்னு செடிக்கு செடி மாத்திட்டிருந்தா போதும். ஆனால் உடம்புக்கு எக்ஸர்சைஸ் கிடைக்காதே? அதான். இந்த ரெண்டு வாளி நிறைய தண்ணீரோட இத்தனை செடிக்கும் நடந்து நடந்து ஊற்றும்போது நல்ல ஒரு உடற்பயிற்சி கிடைக்கும். செடிக்கு தண்ணீர் பாய்க்கிறபோதே நமக்குத் தேவையான ஒரு விஷயமும் கிடைக்கிறதுக்காகத்தான் இப்படி செய்ய ஆரம்பிச்சேன். அரை மணி நேரத்தில் இருநூறு கலோரி வரைக்கும் க்விக்கா பர்ன் அவுட் ஆகும். முடிஞ்சா நீயும் இப்படி செய். கொஞ்சம் குறையும்!” என்றார் அவன் இடுப்புச் சதையை பார்த்தபடியே.
”நல்ல ஐடியாதான் மாமா. ஆனா இது  நமக்கொரு எக்ஸர்சைஸ், கண்டிப்பா பண்ணணும்னு நினைச்சாலேயே செய்ய மனசு வராதே எப்படி நீங்க..”.
”அதுக்கு என்னை மோடிவேட் செய்துகொள்ள இதில ஒரு விஷயம் வெச்சிருக்கேனே?  ட்யூப் வைச்சு ஊற்றறதுக்கு எப்படியும் ஒரு மணி போல ஆகும்.  இதில அரைமணி நேரம்தான் ஆகும். மிச்சமாகிற அந்த அரை மணி!  நமக்கு டயம் முக்கியம் ஆச்சே. அது என்னை வசீகரிச்சு இதை பண்ண வெச்சிடும்.” 
('அமுதம்’ நவம்பர் 2014 இதழில் வெளியானது)

Tuesday, January 5, 2016

நல்லதா நாலு வார்த்தை... 60


’நன்கு அறிந்தவன் அறிவான் 
தான் அறிந்தது 
எத்தனை குறைவென்று.'
- Thomas Jefferson
('He who knows best knows how little he knows.')
<>

’சிரிப்பென்பது
உடனடி விடுமுறை.’
- Milton Berle
(’Laughter is instant vacation.’)
<>

'தன்னை அளிக்கையில் 
அளிப்பதை விட 
அதிகம் பெறுகிறீர்கள்.' 
- Antoine de Saint-Exupery
('When you give yourself, you receive more than you give.')

<>

'உண்மைக்கு சட்டையை அணிய
சந்தர்ப்பம் கிட்டுமுன் 
உலகைப் பாதி சுற்றி வந்துவிடுகிறது பொய்.'
- Winston Churchill
('A lie gets halfway around the world
before the truth has a chance to get its pants on.')
<>

'வாழ்க்கை பற்றிய ஓர் 
ஆச்சரியமான விஷயம் இது;
ஆகச் சிறந்ததைத் தவிர வேறெதையும் 
ஏற்றுக் கொள்ள மறுத்தீர்களானால்
பெரும்பாலும் அதைப் பெறுவீர்கள்.'
- Somerset Maugham
('It's a funny thing about life; if you refuse to
accept anything but the best, you very often get it.')
<>

'ஏதோ சொல்ல விரும்புவதால் 
எழுதுவதில்லை,
சொல்ல ஏதோ இருப்பதால் 
எழுதுகிறோம்.'
- F. Scott Fitzjerald
('You don't write because you want to say something,
you write because you have something to say.')
<>

’கையாளக் கடினமான 
இரண்டே விஷயம் வாழ்க்கையில் 
தோல்வியும் வெற்றியும்.’
- Oscar Wilde
(’The two hardest things for people to handle
in life are failure and success.’)