Tuesday, March 31, 2015

தனக்குத் தானே...

அன்புடன் ஒரு நிமிடம் - 77
“அப்பப்பா, தாங்க முடியலே!” வந்து உட்கார்ந்தார்  நாகராஜன்.
“ஆமா, இன்னிக்கு 41 டிகிரி!” விசிறியபடியே சாத்வீகன்.
“வெயிலைச் சொல்லலே நான்!” என்றார் அவர், “எல்லாம் நம்ம பரமானந்தம் பண்ற கூத்தைத்தான் சொல்றேன்.”
‘அவனா? ஆமா, நேற்றுகூட வந்தானே, ஏதோ ரெண்டு புத்தகம் எழுதப்போறதைப் பத்தி சொல்லிட்டிருந்தான்.”
“உங்க கிட்டேயுமா? சரிதான், அதை சொல்லத்தான் வந்தேன். தம்பட்டம்! தம்பட்டம்! தாங்க முடியலே.!”
“தம்பட்டம்?”
“ஆமா,  நான் ரெண்டு புக் எழுதப் போறேன், அடுத்த ஆறு மாசத்தில ரெண்டு புக், ரெண்டு புக் அப்படீன்னு ஒரே…. வரலாற்றுப் புதினம் ஒன்றாம். இன்னொண்ணு அறிவியல் கட்டுரைத் தொகுப்பாம். ஒவ்வொண்ணும் ஐநூறு பக்கத்துக்குக் குறையாம இருக்குமாம்.”
“சொல்றானாக்கும்?”
“ஆமா, அவர் ஆபீஸ் அட்டெண்டரிலிருந்து அடுத்த தெரு அழகேசன் வரை ஒரு ஆள் விடாமல்!.”
“இனிமேல்… இனிமேல் எழுதப் போறேன்னு?”
“இன்னும் ஆறு மாசத்துக்குள்ளே முடிச்சு பப்ளிஷ் பண்ணிடுவானாம்.”
”ஓஹோ?”
“ஏதோ ஓண்ணு ரெண்டு சிறுகதை, நாலு கவிதை அவர் எழுதி பத்திரிகைகள்ல வந்திட்டது. அதுக்காக இப்படி கையில டமாரத்தை எடுத்திட்டு அலையணுமா? மனசில தான் ஏதோ பெரிய எர்னெஸ்ட் ஹெமிங்வேன்னு நினைப்பு!”
சாத்வீகன் சிரித்தார். “அட, அதான் என்கிட்டேயும் சொன்னானா? புரியுது புரியுது!“
“என்ன சொல்றீங்க, எனக்கு ஒரு மண்ணும் புரியலே!”
“உட்கார். நல்ல கூர்ந்து கவனித்தாயானால் அவன் செய்யறது ஒரு நல்ல டெக்னிக்னு உனக்கும் புரியும். ஓர் ஆள் பாக்கி விடாம இப்படி
அவன் தேடிப்போய் சொல்கிறான்னா எல்லாரிடமும் அவன் ஒரு கமிட்மெண்டை ஏற்படுத்துகிறான்னு அர்த்தம்.  அப்புறம் அதை செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொருத்தரும் கேட்பாங்க இல்லையா, என்னமோ புத்தகம் அது இதுன்னியே என்ன ஆச்சுன்னு? சொந்தக்காரர்களிலிருந்து நண்பர்கள் வரை? வரிசையா அவங்களுக்கு பதில் சொல்லணுமே? அது இதுன்னு சாக்குப் போக்கு சொன்னால் மதிப்பு குறையுமே? எழுத முடியலேன்னோ எழுத வராதுன்னோதானே நினைப்பாங்க? அதை எப்படி சகிக்க முடியும்? அதனால எப்படியும் எழுதியாகணும். அந்த நினைப்பு, அந்த அழுத்தம் எழுத வெச்சிடும். விஷயம் கண்டிப்பா நடந்துடும்…”o

நாகராஜன் வியப்புடன் பார்க்க, தொடர்ந்தார், ”அதான் இப்படி ஒரு சுயப் பொறுப்பை வலியுறுத்தும் சூழ்நிலையை தனக்குத்தானே ஏற்படுத்திக்கிறான். செய்ய நினைக்கிற சில விஷயங்களை செய்து முடிக்க இது ஒரு நல்ல, தோற்றுப்போக சாத்தியமில்லாத வழின்னுதான் நான் சொல்வேன்.”
(”அமுதம்’ மே 2014 இதழில் வெளியானது.)
(படம் - நன்றி : கூகிள்)

Saturday, March 7, 2015

அவள் - 17 (கவிதைகள்)


106
பெரும் துக்கத்துக்குப்
பின் வரும்
சந்தோஷம் போல
நீ.
 <>

107
நான் இல்லாத நாட்களில் உன்
முகம் பார்க்கும் கண்ணாடியைத்
தொலைத்திருந்தாய் நீ.
<>

108
அந்த இரு கவிதைகளுக்குள்
ஆக்ரோஷமான விவாதம்
ஆர் உன்னை
சரியாக வர்ணித்ததென்று.
<>

109
உன் விழிகளில்
நீந்திடும் கனவுகளில் என்
வண்ணம் என்னவோ?
<>

110
எவ்வித கிட்டப் பார்வையோ
தூரப்பார்வையோ இல்லை
என் உணர்வுகளைப்
படிக்கையில் உனக்கு.
<>

111.
மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருந்தது அவள்
அழகு விழுந்து விடாமல் சிரிப்பதற்கு
அவள்.
<>

112
 உன்னை ஒரு பார்வை
வியந்து பார்த்துவிட்டு
தன்னை எழுதிக் கொண்டது
கவிதை.

><><><><

Wednesday, March 4, 2015

கவனிக்க வேண்டியது...


அன்புடன் ஒரு நிமிடம் - 76

ஒரே அறையில்தான் இருந்தார்கள் என்றாலும்ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு....

"சந்தர்ப்பம் சரியில்லை போல... அப்ப நான் இன்னொரு நாள் வர்றேன்." திரும்ப யத்தனித்தார் ராகவ்.

யாழினியும் சரி கிஷோரும் சரி ஒரே நேரத்தில் திரும்பினார்கள். "வாங்க, வாங்க!"

"சொல்லுங்க என்ன பிரசினை? நானும் பார்க்கிறேன் நாலு நாளா... போனில் பேசினால் உன்குரலும் சரியில்லை அவள் குரலும்!"

"பின்னே நீங்களே சொல்லுங்க. " யாழினியே ஆரம்பித்தாள்.

"இருங்க மாமா, இவள் சரியா அப்படியே சொல்ல மாட்டாள். நானே சொல்றேன். இந்த டைனிங்டேபிளைக் கொஞ்சம் பாருங்க. பெரிசா ஏதும் டேமேஜ் தெரியுதா?"

கண்ணாடி பதித்த டேபிளை உற்றுப் பார்த்துவிட்டு, "சின்னதா ஒரு க்ராக் தெரியுது. எப்படி நேர்ந்தது?"

"டம்ளரைக் கொஞ்சம் வேகமா வெச்சிட்டேன் அவ்வளவுதான். எப்பவும் ஒரே மாதிரி இருக்குமா? லேசா லைன் விழுந்துடிச்சு. அதுக்குப்போய் அந்தக் கத்தல் கத்தறா."

"எத்தனை அழகான டேபிள்! இப்படி கொஞ்சம் கூட கவனமில்லாம நடந்துக்கிட்டா கத்தமாட்டாங்களா?" என்றாள் அவள்.

"அப்ப இதே போல அவள் செய்த காரியத்துக்கு நான் கத்தினா மட்டும் ஏன் கோபம் பொத்துட்டுவருது?"

"அதென்ன காரியம்?"

"தோட்டத்தில வேப்ப மரத்துக்குக் கீழே ஒரு சிமண்ட் செயர், இள மஞ்சள் கலரில பெயிண்ட்அடிச்சு போட்டிருக்கு இல்லையா, அதில முந்தாநேத்து இவள் ஒரு பாத்திரத்தால இடிச்சதில அதுகை ஒடிஞ்சு போய்... ரிப்பேர் பார்த்த பிறகும் இளிச்சிட்டிருக்கு. நான் உட்கார்றது அது. பார்க்கஎனக்கு எத்தனை கோபம் வரும்?" அவன் அவரைப் பின்னால் அழைத்துப் போய்க் காட்டினான்.பார்த்தார். யோசனையிலாழ்ந்தார் .

"என்ன இங்கே வந்தது சரிதானான்னு யோசிக்கிறீங்களாக்கும்?"

அதுக்கெல்லாம் அயர்கிறவர் அல்லவே அவர்? கவனிக்க வேண்டிய பாயிண்ட் எங்கேஅமர்ந்திருக்கிறது என்று உணர்ந்தார். அதை சரியாக உணர்த்திவிட்டால் வெற்றி தான் அவருக்கு.

" இந்த சிமெண்டு செயர் நீ உட்கார்றதா? எப்ப, தினம் காலையில உட்கார்ந்து பேப்பர்படிப்பாயாக்கும்?"

"அதெல்லாம் இல்லே, எப்பாவாவது தோணினால் போய் உட்காருவது தான்."

"ஆனால் அந்த டைனிங் டேபிள் நீங்க ரெண்டு பேரும் தினம் நாலு நேரம் உட்காருவது. அதனால் சின்னதா இருந்தாலும் இது நம்மை அதிகம் பாதிப்பது. அதனால் அவள் வருத்தம் ஆறுவதற்குகொஞ்சம் அதிகம் அவகாசம் கொடுக்க வேண்டியதுதான்," என்றவர் காதோடு சொன்னார், "ஒருதடவைக்கு நாலு தடவை ஸாரி சொன்னாலும் ஒண்ணும் ஓவராகிவிடாது."

புரிந்து கொண்டு தலையாட்ட அவர் புன்னகைத்தார்.
(’அமுதம்’  மே 2014 இதழில் வெளியானது)
><><
(படம் - நன்றி: கூகிள்)